Tamilnadu

“திராவிட இயக்கம் பெண்ணுரிமைக்காக போராடியதில் உலகளவில் கிடைத்த வெற்றி இது”: பூண்டி கலைவாணன் MLA பெருமிதம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றியை திருவாரூர் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களுமே மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பூர்விக கிராமமான துளசேந்திரபுரம் கிராமத்திற்கு சென்று பட்டாசு வெடித்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

மேலும் கமலா ஹாரிஸ் நன்கொடை வழங்கிய அவரது குலதெய்வ கோவிலில் கமலா ஹரிஸ் பெயர் பொறித்த கல்வெட்டை பார்வையிட்டு, கோவில் நிர்வாக அறங்காவலர் ரமணி என்பவரிடம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான பூண்டி கலைவாணன், “திராவிட இயக்கம் பெண்ணுரிமைக்காக போராடியதில் உலக அளவில் கிடைத்த வெற்றியாக இதனை கருதுகிறோம்.

இந்த காவிரி படுகை படுகை மாவட்டங்கள் நாகரிகம், கலாசாரம், அரசியல் உட்பட அத்தனைக்கும் ஆணிவேரான அடித்தளமான மண்.இதனை மீண்டும் மீண்டும் ஒவ்வொருவராக நிரூபித்து இந்த மண்ணிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹரிஸ்க்கு திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துளார்.