Tamilnadu
நெய்வேலியில் ஒரு சாத்தான்குளம்.. முந்திரி வியாபாரி அடித்துக்கொலை.. சிபிசிஐடி விசாரணைக் கோரும் வைகோ!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரில் செல்வமுருகன் என்பவர் முந்திரி வணிகம் செய்து வருகின்றார். இவர் கடந்த அக்டோபர் 28ம் தேதி அன்று காலையில், வடலூர் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது மனைவி பிரேமா, அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. எனவே பிரேமா, வடலூருக்கு வந்து தேடிப்பார்த்துவிட்டு, காவல் நிலையம் சென்று, புகார் கொடுத்தார். ஆனால், அவர்கள் வாங்கவில்லை; நெய்வேலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறினார்கள்.
இரவு 8 மணி அளவில் பிரேமா அங்கே சென்றபோது, அவர்கள் மறுநாள் காலையில் வருமாறு கூறியிருக்கிறார்கள். அப்போது, பிரேமாவையும், அவரது குழந்தைகளையும் காவலர்கள் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டார்கள். அங்கிருந்து பிரேமா வீடு திரும்புகின்ற வழியில், ஆய்வாளர் ஆறுமுகம், காவலர்கள் சுதாகர், அறிவழகன் மற்றும் அடையாளம் தெரிந்து பெயர் தெரியாத ஒரு காவலர் ஆகியோர் பிரேமாவை வழிமறித்து விசாரித்தனர்.
அப்போது, உன் கணவர் மீது பல வழக்குகள் உள்ளன என்று கூறியிருக்கிறார்கள். மறுநாள் காலையில் காவலர்கள் தொடர்பு கொண்டு, இந்திரா நகரில் உள்ள ராணி & ராணி என்ற தங்கும் விடுதிக்கு வரச் சொன்னார்கள். குழந்தைகளுடன் அங்கே சென்ற பிரேமாவிடம் உன் கணவர் செல்வமுருகன் மீது திருட்டு வழக்கு போடப் போகின்றோம்; 10 பவுன் செயின் கொடுத்துவிட்டால், வழக்குப் பதியாமல் விட்டு விடுகின்றோம் என்று மிரட்டி, அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
அக்டோபர் 30 அன்று, நெய்வேலி நகர காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார்கள். பிரேமா அங்கே சென்றபோது, செல்வமுருகனை, காவல் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தார்கள். அவர், தன் மனைவி பிள்ளைகளைப் பார்த்துக் கதறி அழுதத்தோடு தன்னை அடித்துச் சித்திரவதை செய்து, திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி மிரட்டியதாக கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், காவலர்கள் பிரேமாவையும் அடித்து மிரட்டி, அவரிடம் சில காகிதங்களில் கையெழுத்து வாங்கினார்கள்; இங்கே நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பினார்கள். அன்று இரவு மீண்டும் பிரேமாவைத் தொடர்பு கொண்டு, 5000 ரூபாய் கொண்டு வர வேண்டும் என்றார்கள்.
பிரேமா, தன் உறவினர் மூலமாக 5000 ரூபாய் கொடுத்து அனுப்பினார். அதன்பிறகு, செல்வமுருகனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர் விருத்தாசலம் கிளைச் சிறையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, நவம்பர் 2 ஆம் நாள் பகல் 12 மணி அளவில், பிரேமா, தன் குழந்தைகளுடன் அங்கே சென்றார். அப்போது செல்வமுருகனை, காவலர்கள் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். அவரால் நடக்க முடியவில்லை.
விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேயே அவரைச் சேர்த்து மருத்துவம் செய்யுமாறு கேட்டபோது மறுத்து, 2 மணி நேரம் கழித்து, மீண்டும் சிறைக்கு அனுப்பி விட்டார்கள். மீண்டும் 4 ஆம் தேதி இரவு 11 மணி அளவில் அழைத்து, செல்வமுருகன் விருத்தாசலம் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறி, அங்கே சென்று பார்க்கும்படிக் கூறினார்கள். பிரேமா அங்கே சென்றபோது, அவர் இறந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.
இதற்கு மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்ததோடு நெய்வேலி காவல் நிலையத்தில் அவரை அடைத்து வைத்து அடித்துச் சித்திரவதை செய்ததால்தான், செல்வமுருகன் இறந்திருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் செல்வமுருகன் உடலை, வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் உடல்கூறு ஆய்வு செய்ய வேண்டும்; அப்போது, செல்வமுருகன் உறவினர் ஒருவர் உடன் இருக்க வேண்டும்; உடல்கூறு சோதனைகளை காணொளிப் பதிவு செய்ய வேண்டும்; அந்தக் காணொளிப் பதிவின் ஒரு படியை, பிரேமாவிடம் வழங்க வேண்டும்; நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது, கொலை வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நெய்வேலி காவல்துறையின் அத்துமீறலுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை செய்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அண்மையில் சாத்தான் குளத்தில் தந்தையும், மகனும் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரத்தைத் தொடர்ந்து, நெய்வேலி நகரக் காவல்நிலையத்தில் நடந்த அத்துமீறல் காவல்துறை திருந்தவில்லை என்பது வெளிப்படுகிறது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!