Tamilnadu
“வேல் யாத்திரைக்கு நேற்று அனுமதி மறுத்த அ.தி.மு.க அரசு, இன்று யூடர்ன் அடித்தது ஏன்?” - கி.வீரமணி கேள்வி!
தமிழக பா.ஜ.க சார்பில் நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு நேற்று அனுமதி மறுத்த அ.தி.மு.க அரசு, இன்று திடீரென்று அனுமதி அளித்திருப்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா காரணம் என்னாயிற்று? கொரோனா தொற்றின் அடுத்தகட்டப் பரவலின் ஆபத்தைச் சுட்டிக்காட்டி, வேல் யாத்திரைக்கு நேற்று (5.11.2020) அனுமதி மறுத்த தமிழக அ.தி.மு.க அரசு, இன்று (6.11.2020) திடீரென்று ‘யூ’டர்ன் அடித்து, தனது நிலையைத் தலைகீழாக மாற்றிக் கொண்டது ஏன்?
தடையை மீறிய நிலையில், பூவிருந்தவல்லி அருகே பா.ஜ.க தலைவரைக் கைது செய்யத் தயாராக இருந்த அந்தத் தருணத்தில், காவல்துறை - திடீரென்று மேலிடத்து உத்தரவால் பின்வாங்கிவிட்டது.
கொரோனா அடுத்து பரவாது என்று ஒரே நாளில் திடீர் ‘ஞானோதயம்‘ ஏற்பட்டு, முடிவை மாற்றிக் கொண்டுவிட்டதா அரசு? தமிழகத்தை ஆள்வது அ.தி.மு.கவா - பா.ஜ.கவா?
இதன் பின்னணி என்ன? மத்திய பா.ஜ.க அரசின் தலையீட்டால் - அழுத்தம்தான் அ.தி.மு.க அரசின் இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள எந்தவித சிரமமும் இல்லை. பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில்தான் மாநில அ.தி.மு.க அரசு நடந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே பொதுவாகப் பரவலாகவே இருந்து வருகிறது.
அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் - தமிழ்நாட்டை ஆள்வது அ.தி.மு.க அரசா - பா.ஜ.க அரசா என்ற கேள்வி சர்வசாதாரணமாக மக்கள் மத்தியில் பெரிய அளவில் பரவலாகப் போகிறது என்பதில் ஐயமில்லை. இந்தக் குற்றச்சாட்டிலிருந்து அதிமுக அரசு விடுபடுவது அவ்வளவு எளிதானதல்ல.
இலைமறை காயாக இருந்த இந்தக் குற்றச்சாட்டு - மேலும் விரிவாகி, பா.ஜ.கவிடம் அ.தி.மு.கவின் பச்சை ‘‘சரணாகதி படலம்‘’ என்பது திட்டவட்டமாகி விட்டது. அப்பட்டமான அவமானத்தையும், கேலியையும் தமிழக அரசு வலிந்து சம்பாதித்துக் கொண்டது அசல் வெட்கக்கேடே.
நல்லாட்சிக்கு அழகல்ல அனுமதி மறுப்பில் முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்ட இரண்டாம் நிலை கரோனா பாதிப்பு இந்த வேல் யாத்திரையின் காரணமாக ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பு? பா.ஜ.கவா? அனுமதி கொடுத்த அ.தி.மு.க அரசா? ஓர் ஆட்சி நிர்வாகத்துக்குரிய அழகல்ல இது - இருக்க முடியாது.
அண்ணாவின் பெயரால் நடைபெறும் ஓர் அரசு மாநில உரிமையை இந்த அளவுக்கு அடகு வைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த முடிவுக்கு அ.தி.மு.க அரசு கடும் விலையைக் கொடுக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பீகார் அரசை விமர்சித்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ மைத்லி தாக்கூர் : சட்டப்பேரவையில் சரமாரி கேள்வி!
-
“தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்களை அளிக்காதது ஏன்?” : பட்ஜெட் மீதான விவாதத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
பா.ஜ.க மாவட்டத் தலைவர் கொடுத்த 'டார்ச்சர்': பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!
-
“தொடர்ந்து 9 தோல்விகரமான நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிப்பதே ஒரு சாதனைதான்!” : கனிமொழி என்.வி.என் சோமு!
-
“மிசா - சிறையில் நான் பட்ட கொடுமைகள்” : #VibeWithMKS - நினைவுகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!