Tamilnadu

“தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எங்கு தமிழ் இருக்கும்?” - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

டிஎன்பிஎஸ்சி க்ரூப்-1 தேர்வில் தொலைநிலைக் கல்வியில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழ் வழியில் படித்தவர்கள் என்றால் பள்ளியிலிருந்தே தமிழ் வழி கல்வி பயின்றவர்களா? அல்லது பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா? என் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வரும் சூழலில், பட்டப் படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதும் என்றால் அதன் நோக்கமே சிதைந்துவிடும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதே நிலை நீடித்தால், தமிழ்நாட்டில் தமிழ் இல்லாமல் மறைந்துவிடும் என வேதனை தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், அஞ்சல் வழியில் தமிழ் வழிக் கல்வி படித்தவர்களுக்கு இந்த 20 சதவீத ஒதுக்கீட்டில் இடம் வழங்கக் கூடாது என அரசாணையில் திருத்தம் கொண்டு வரும் வரை ஏன் டிஎன்பிஎஸ்சி க்ரூப் 1 தேர்வு நடத்த தடை விதிக்க கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Also Read: “சவுடு / உபரி மண் அள்ள 5 ஆண்டுகளில் எத்தனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன?” - அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!