Tamilnadu

கொரோனா வார்டில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவர் ‘மர்ம’ மரணம் : பணிச்சுமை தாளாமல் தற்கொலையா?

ராஜீவ் காந்தி மருத்துவமனை கொரோனா வார்டில் பணியாற்றிய முதுநிலை மருந்துவ மாணவர் லோகேஷ் குமார் மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் வனவாசியைச் சேர்ந்த லோகேஷ் குமார் (24) சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்து முதுநிலை மருத்துவம் முதலாமாண்டு படித்து வருகிறார். கொரோனா வார்டில் பணியாற்றிய இவர் கடந்த அக்டோபர் 14ம் தேதி தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 25ம் தேதி விடுதி ஊழியருடன் தொலைபேசியில் பேசியதற்குப் பின்னர் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மாமா கார்த்திக் என்பவர் ஓட்டல் நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியதின் பேரில் நேற்றிரவு 11 மணிக்கு ஓட்டல் ஊழியர்கள் மற்றொரு சாவியைக் கொண்டு அறையைத் திறந்து பார்த்தபோது லோகேஷ் குமார் வாந்தி எடுத்த நிலையில் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ முதலாம் ஆண்டு மாணவர் லோகோஷ் குமார் மர்ம மரணம் குறித்து நேர்மையான, வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கிட வேண்டும்.

இராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டு பணி 6.00 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், சென்னை மருத்துவக் கல்லூரியோடு இணைந்த பல மருத்துவமனைகளிலும், பல மருத்துக் கல்லூரிகளிலும், கொரோனா வார்டு பணி 12 மணி நேரத்திற்கு மேல் வழங்கப்படுகிறது.

இது கண்டனத்திற்குரியது. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எனவே, 6 மணி நேரம் மட்டுமே கொரோனா வார்டு பணி என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான பயிற்சி மருத்துவர்கள் ,பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு நிவாரணமாக ரூ. 2 லட்சம் வழங்கிட வேண்டும். அவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும். அவர்களுக்கான பயிற்சிக் கால ஊதியத்தை உயர்த்திட வேண்டும்.

கொரானா காலக்கட்டத்தில் இறந்த அனைத்து பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்கிட வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Also Read: உயிருடன் உள்ள பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள் : பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்!