Tamilnadu

தானியங்கி விசைத்தறிக்கு மானியம் கொடுக்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசு: ஜவுளித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

சாதாரண விசைத்தறியை, தானியங்கி விசைத்தறியாக தரம் உயர்த்துவதற்கு வழக்கப்படும் மானியத்திற்கு விண்ணப்பித்தும் 3 ஆண்டுகளாக வழங்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய ஜவுளிதுறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச அளவில் துணித்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கைத்தறி உற்பத்தியை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் வகையில், விசைத்தறியை தானியங்கி விசைத்தறியாக மாற்ற மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசின், இந்த மானியம் பெறுவதற்காக விசைத்தறி நெசவாளர்கள் அளித்த விண்ணப்பங்களை பரிசீலித்த ஜவுளித்துறை இணை இயக்குனர், தறி நெய்யும் இடங்களை நேரடியாக ஆய்வு செய்து புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

ஆனால் இந்த விண்ணப்பங்கள் மீது கடந்த 3 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், மானியமும் வழங்கப்படவில்லை எனவும் கூறி, கோவையை சேர்ந்த அசோக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவலின்படி, தானியங்கி விசைத்தறி மானிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு, 2020-21ஆம் ஆண்டிற்கு 7 கோடியே 69 லட்ச ரூபாயை ஒதுக்கி இருப்பதால், மானியம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மானியம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஜனவரி 4ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, இந்திய ஜவுளித்துறை ஆணையர், கோவை மண்டல இணை இயக்குனருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Also Read: சட்டவிரோத கட்டுமானங்களை ஊக்குவிப்பதா? புதிய மின் இணைப்பு பெற கட்டட முடிப்பு சான்றிதழ் அவசியம் - ஐகோர்ட்