Tamilnadu

விருதுநகரில் பிரியாணி கடை விளம்பரத்தால் குவிந்த கூட்டம் : மக்கள் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்காத அவலம்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் உணவகம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இன்று "பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி" என விளம்பரம் செய்திருந்தது.

இந்நிலையில் விளம்பரத்தை பார்த்து முதல் ஆளாக பிரியாணி வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆயிரக்கனக்கான பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் முகக்கவசம் கூட அணியாமல் அந்த உணவகத்தின்முன் குவிந்தனர்.

நீண்ட வரிசையில் முட்டி மோதி பிரியாணியை வாங்கி சுவைக்க பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு கூட்டமாக பிரியாணிடன் இணைந்து கொரோனாவையும் இலவசமாக வாங்கிச்சென்றனர்.

பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி என்ற விளம்பரத்தைப் பார்த்து கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காவல்துறையினர் விரைந்து வந்து பிரியாணி கடையை இழுத்து மூடினர். எனினும் பிரியாணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டமாக குறையாததால் காவல்துறையினர் பொதுமக்கள் அனைவரையும் விரட்டி அடித்தனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களிலும் வணிக வளாகங்களிலும் உணவகங்களிலும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்; கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

ஆனால் பலரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி வரும் நிலையில், தங்களுடைய சுயலாபத்திற்காக இதுபோன்ற ஒரு சிலர் செய்யும் செயல்களால் கொரோனா தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது போன்று ஊரடங்கை மீறி செயல்படும் நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Also Read: “ஊரடங்கை மதிக்காமல் ஊரைக் கூட்டி பிரியாணி விருந்து வைத்த பா.ஜ.க எம்.எல்.ஏ” - கர்நாடகாவில் நடந்த கொடுமை!