Tamilnadu

கோவில் நிதியில் அதிகாரிகளுக்கு கார் வாங்குவதா? - உபரி நிதி இடைக்காலத் தடையை நிரந்தமாக்கி ஐகோர்ட் அதிரடி!

கிராம கோவில்களை சீரமைக்க, பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயை ஒதுக்கி அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், கோவில் நிதி, அமைச்சருக்கு கார் வாங்குவதற்கும் அறநிலையத்துறை அலுவலகம் கட்டவும் பயன்படுத்தப்படுவதாக மனுதாரர் குற்றம்சாட்டினார்.

மேலும், 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அறங்காவலர்கள் இல்லை எனத் தெரிவித்த மனுதாரர் தரப்பு, உபரி நிதி ஒதுக்குவதற்கான கோவில்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் கடந்த மூன்று மாதங்களில் பல கோவில் சொத்துகள் விற்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கவேண்டும் என அறநிலையத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அதிகாரிகளுக்கு கார் வாங்க அரசு நிதியை ஏன் பயன்படுத்த கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், 'சிவன் சொத்து குலம் நாசம்' என்ற பழமொழியையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

சட்டங்கள், விதிகள் இருந்தாலும், அவை அமல்படுத்தப்படுகிறதா? என சந்தேகம் எழுப்பிய நீதிபதிகள், இதுவரை கோவில் சொத்துகள் கணக்கிடப்பட்டுள்ளதா என்றும் அந்த நிலங்கள் யார் பெயரில் உள்ளன எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுக்களில் திருப்தி இல்லை என்றால் அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் ஒவ்வொரு விசாரணையின் போதும் ஆஜராக உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

அறநிலையத்துறை பட்டியலில் உள்ள கோவில் சொத்துகளை 10 ஆண்டுகளானாலும் கணக்கிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உபரி நிதி பயன்படுத்த கூடாது என்ற இடைக்கால தடையை நிரந்தரமாக்கி உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்குகளின் விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also Read: ரூ. 2,650 கோடி டெண்டர்கள் ரத்து : ஊராட்சி மன்ற அதிகாரத்தை பறிக்கும் அ.தி.மு.க அரசுக்கு ஐகோர்ட் குட்டு!