Tamilnadu

பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து கல்வி நிறுவனங்கள் சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிகள், 75 சதவீத கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் எனவும், ஆகஸ்ட் இறுதிக்குள் 40 சதவீத கட்டணமும், மீத தொகையை பள்ளிகள் திறந்த பின் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மீறி, பள்ளிகள் மொத்த கட்டணத்தையும் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கும் பள்ளிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, அந்த பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி ஏற்கனவே தமிழகத்தில் தனியார் மெட்ரி குலேஷன் பள்ளிகள் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 32 சிபிஎஸ்இ பள்ளிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக சிபிஎஸ்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ஆனந்தவெங்கடேஷ், சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழக அரசு பள்ளிகளை திறக்க எப்போது வாய்ப்புள்ளது என்பது குறித்து பதில் அளிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Also Read: வருகைப் பதிவேட்டில் ஸ்ட்ரிக்ட் கூடாது; எந்நேரமும் மாஸ்க் கட்டாயம்- பள்ளிகள் செயல்பட நெறிமுறைகள் வெளியீடு!