Tamilnadu

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி விடுவிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியதன் காரணமாக திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கு குற்றவாளி விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குரும்பபட்டி கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கிருபாநந்தன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், விசாரணையின் முடிவில் கிருபாநந்தன் விடுதலை செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, தமிழக அரசு சார்பாக இவ்வழக்கில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அமர்வில், மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு குறித்து மகளிர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கிருபாநந்தன் மற்றும் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Also Read: “பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமான தமிழகம்? : நீதி கிடைக்க மேல்முறையீடு செய்க” - மு.க.ஸ்டாலின் கோரிக்கை!