Tamilnadu

தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் ஆபத்து : தண்ணீர் குடிக்கச் சென்ற இரண்டு யானைகள் பலியான சோகம்!

தமிழக வனப்பகுதிகளான தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் உயர் மின் அழுத்தக் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன. அந்தப் பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் ஏரிகளின் நடுவிலும் உயர் மின் அழுத்தக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் உள்ள வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் நீர்நிலைகள் வழியாக மின் கம்பங்கள் பதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி வனப்பகுதியை ஒட்டி, கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்காவுக்குச் சொந்தமான வனப்பகுதிகள் உள்ளன.

இந்தப் பகுதியிலிருந்து தளி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் தண்ணீர், உணவு தேடி 200-க்கும் மேற்பட்ட யானைகள் நுழைவது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த 3- ஆம் தேதி, பன்னார்கட்டா பூங்காவுக்கு உட்பட்ட இரண்டு யானைகள் சிக்கேனஹள்ளி ஏரியில் தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளன. இந்த ஏரியின் நடுவில் உயர் மின் அழுத்தக் கம்பங்களிலிருந்து மின்கம்பி அறுந்து, ஏரியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த யானைகள் மீது விழுந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கியதில் அந்த இரு யானைகளும் உயிரிழந்தன. அந்த யானைகளுக்கு 12 முதல் 18 வயதுக்குள் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சந்தேகோடள்ளி வனச்சரக அலுவலர் பிரசாந்த் மற்றும் வனத்துறையினர், யானைகளின் உடல்களை மீட்டு சம்பவ இடத்திலேயே இரு யானைகளுக்கும் உடற்கூறாய்வு செய்தனர். உடற்கூறாய்வு முடிந்ததும் ஏரிக்கரை அருகிலேயே இரண்டு யானைகளையும் குழி தோண்டிப் புதைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து கர்நாடகா மாநில வனத்துறையினர் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உயர்மின் அழுத்தக் கம்பிகள் தாழ்வான பகுதிகளில் அமைக்கப்படுவதன் ஆபத்தை உணர்ந்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்கள் மற்றும் அந்த சுற்று வட்டார மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Also Read: ஆசியாவின் மிகப்பெரிய பெண் யானை கல்பனா உயிரிழப்பு - வனத்துறையினர் மரியாதை!