Tamilnadu
விவசாயத்துக்கான கால்வாய் மீது சாலை அமைப்பதா? வழக்கு மீது பதிலளிக்காத அரசு.. அபராதம் விதித்து ஐகோர்ட் ஆணை!
கோவை பேரூர் பகுதியில் விவசாயத்திற்கு நொய்யல் ஆறு மிக முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது. இந்த பாசனத்தினை பயன்படுத்தி பேரூர் கீழேரி பட்டீஸ்வரர் திருகோவிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்தும் அப்பகுதியின் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்த கோவில் நிலங்களின் ஒரு பகுதி விவசாய நிலமாகவும் மற்றொரு பகுதி நீர் வரும் கால்வாயாகவும் நடுவில் மண்ணால் போடப்பட்ட சாலையும் இருந்து வருகிறது. கால்வாய் முறையாக பரமாரிக்கப்படாத நிலையில் அங்கு குப்பைகள் கொட்டுபடுவதும், ஆக்கிரமிக்கப்படுவதும் சமீப காலமாக அதிகரித்து வந்தது.
இந்நிலையில் கால்வாய் மீது புதிய சாலை அமைப்பதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியிருந்தார். இந்த அனுமதி தொடர்பாக அப்பகுதியின் கிராம மக்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்படவில்லை
எனவே கால்வாய் மீது சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய கோரி பேரூர் பட்டீஸ்வரர் திருகோவில் குத்தகை விவசாயிகள் சங்கம் மற்றும் பேரூர் கீழேரி நீர் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி அனிதா சுமந்த், தொடர்ந்து கால அவகாசம் கேட்பதால், தமிழக அரசின் வருவாய் துறை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூர் பஞ்சாயத்தின் செயல் அதிகாரி ஆகியோருக்கு 2 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும், அந்த தொகையை அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக வரும் அக்டோபர் 9ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!