Tamilnadu

ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வு அறிக்கைகள் தாக்கல் செய்யாதது ஏன்? - அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி!

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் அகழாய்வை தொடரவும், முடிவுகளை வெளியிடவும் வலியுறுத்தி வழக்கறிஞர் திருமுருகன், உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன. தமிழக அரசு சார்பாக, தமிழக தொல்லியல் துறையில் காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்துள்ளோம். விரைவில் பணி நியமனம் செய்யவுள்ளோம். ஆதிச்சநல்லூர், கொடுமணல், கொற்கை, மயிலாடும்பாறை உள்ளிட்ட 7 இடங்களில் தொல்லியல் ஆய்வை தொடர மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும் விரைவில் பணிகள் துவங்கும்.

கீழடி 5 மற்றும் 6ம் கட்ட ஆய்வுகள் குறித்து விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்றார். அப்போது நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை அகழாய்வு தொடர்பான அறிக்கை ஏன் தாக்கல் செய்யப்படவில்லை. தமிழகத்தில் பல இடங்களில் அகழாய்வு நடந்தும் ஒரு ஆய்வின் அறிக்கை மட்டுமே வெளியாகியுள்ளது.

Also Read: “அரசுப் பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு தமிழக அரசே பொறுப்பு” : உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!

மற்ற இடங்களில் நடந்த ஆய்வின் அறிக்கைகள் ஏன் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. அவற்றின் தற்போதைய நிலை என்ன. எப்போது அறிக்கை வெளியிடப்படும். தொல்லியல் கல்வெட்டுகளை படிமம் எடுக்கும் வசதி மைசூருவில் மட்டுமே உள்ளது. ஏன் அதன் கிளையை சென்னையில் வைக்கக்கூடாது.

பொருந்தல், கொடுமணல் ஆகியவை கி.மு 500 ஆண்டுக்கு முந்தையது என்றும், ஆதிச்சநல்லூர் கி.மு 580 ஆண்டுக்கு முந்தையது என்றும் தெரிகிறது. குறிப்பாக அசோகர் காலத்திற்கு முந்தையது என்பது புலனாகிறது என்றனர். பின்னர் நீதிபதிகள், மைசூருவில் உள்ள கல்வெட்டி படிமம் வசதியை ஏன் சென்னைக்கு கொண்டு வரக்கூடாது.

தமிழக தொல்லியல் துறை விண்ணப்பத்தின் மீது எப்போது மத்திய தொல்லியல் துறை அனுமதி கிடைக்கும். தமிழகத்தில் ஏன் முழுமையாக மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

Also Read: சமஸ்கிருதத்திற்கு இடம்... தமிழ் மொழி புறக்கணிப்பு : மத்திய அரசின் அறிவிக்கையால் தமிழர்கள் கொந்தளிப்பு!