Tamilnadu
போலிஸ் ஆளும் நாடாக இந்தியா மாறிவிடக் கூடாது.. வரலாற்று திரிபு ஏற்படும் - சென்னை ஐகோர்ட் நீதிபதி கருத்து!
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சென்னை தாம்பரத்தை சேர்ந்த தேவி என்பவர், எதிர்காலத்தில் நன்னடத்தையுடன் நடப்பதாக கூறி இரு நபர் உத்தரவாதத்துடன் பிணைப்பத்திரம் ஒன்றை 2019 டிசம்பர் 16ல் எழுதி கொடுத்துள்ளார்.
ஆனால் அடுத்த ஐந்தாம் நாளான டிசம்பர் 21ல் கஞ்சா வைத்திருப்பதாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், பிணைப்பத்திரத்தை மீறியதாக கூறி தேவியை ஒராண்டு சிறையில் அடைக்க நிர்வாகத்துறை நடுவரான ((எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்)) காவல்துறை துணை ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தேவி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், மாவட்ட காவல்துறை சட்டப்படி, காவல்துறையினருக்கு நீதித்துறை அதிகாரம் வழங்கக்கூடாது என கூறப்பட்டுள்ளதால், தேவியை சிறையில் அடைத்து எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக நலனுக்காக காவல்துறை சட்டத்தில் எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்டுக்கு நீதித்துறை அதிகாரத்தை ஆங்கிலேய அரசு வழங்கியதாகவும், அந்த அதிகாரத்தின் கீழ் மகாத்மா காந்தி, வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் விடுதலைக்கு பின், நிர்வாகம் மற்றும் நீதித்துறை அதிகாரங்களை பிரிக்கும் வகையில், சட்டமேதை அம்பேத்கரால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 50வது பிரிவு உருவாக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் அதிகாரங்களை பிரித்து தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ராஜாஜி அரசாணை பிறப்பித்ததாகவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காவல் துணை ஆணையராக இருப்பவரை எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்டாக நியமித்து 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள், ராஜாஜி கொண்டுவந்த அரசாணைக்கு விரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை ஆணையருக்கு எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் அந்தஸ்து கொடுப்பதை தொடர்ந்து அனுமதித்தால், வரலாறு மீண்டும் திரும்பிவிடும் என்றும், இந்தியா போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
அதிகார பகிர்வு திட்டத்திற்கு முரணாக 2013ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் உள்ளதா என்பதை ஆராய வேண்டியுள்ளதால், தனி அமர்வை அமைத்து விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
Also Read
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!