Tamilnadu

“எஸ்.பி.பிக்கு பதிலாக எஸ்.ஆர்.பி” “நகைக் கடனுக்கு பதிலாக நாய் கடன்”- கன்ஃபியூஸ் ஆன அ.தி.மு.க அமைச்சர்கள்!

குதர்க்கமான செயல்களுக்கு பெயர்போன அ.தி.மு.க அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், திண்டுக்கல் சீனிவாசனும் தற்போது புதிதாக உளறிக்கொட்டி சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு செல்லூர் ராஜூ, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் பற்றிக் கேட்பதாக நினைத்து ‘ஜெயலலிதாவின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர் அவர். ஜெயலலிதா மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாக எதிர்க்கட்சியில் இருந்து குரல் கொடுத்தவர்” எனக் கூறினார்.

இதைக்கேட்டு அருகே இருந்தவர்களும், செய்தியாளர்களும் குழப்பமடைந்தனர். உடனிருந்த அமைச்சர் சீனிவாசன் குறுக்கிட்டு மறைந்தவர் எஸ்.பி.பி எனச் சொல்ல, சுதாரித்துக்கொண்டு பேசினார்.

இதேபோல, உளறல்களுக்குப் பெயர்போன மற்றொரு அ.தி.மு.க அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசனும் இன்று உளறிக்கொட்டி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள சீலப்பாடியில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி விஜயலட்சுமி என்பதற்கு பதிலாக திருமதி ஜெயலட்சுமி எனக் கூறியுள்ளார்.

பின்பு நடந்து முடிந்த பணிகள் எனச் சொல்வதற்குப் பதிலாக நடைபெறப் போகும் பணிகள் என்றும் நகைக் கடன்கள் என்பதற்குப் பதிலாக நாய் கடன்கள் என்றும் இஷ்டத்துக்கு உளறிக்கொட்டியது அங்கிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.