Tamilnadu
போலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மாயம் - மீட்டுத்தரக்கோரி மனைவி தீக்குளிப்பு முயற்சி!
போலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மாயமான கணவரை மீட்டுத்தரக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனைவியும், அவரது தாயாரும் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் காந்திகிராமம் சேர்ந்த மோகனாம்பாள் (48). இவரது மகன் முரளி ( 21) இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரும் சிவகிரியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி அன்று முரளியும், அந்தப் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகிரி போலிஸார் கரூர் காந்திகிராமத்தில் வீட்டிலிருந்த முரளியின் அக்கா ஹேமாவின் கணவர் அருண்குமார் (32) என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணை என்ற பெயரில் போலிஸார் அழைத்துச் சென்ற அருண்குமார் இரண்டு நாட்கள் கடந்தும் அவர் வீடு திரும்பவில்லை. சிவகிரி போலிஸாரிடம் கேட்டதற்கு விசாரணை முடித்து அனுப்பிவிட்டதாக கூறியுள்ளனர்.
போலிஸார் விசாரணைக்குச் சென்ற தனது கணவரை மீட்டுத்தரக்கோரி மனைவி ஹேமா (28) மற்றும் ஹேமாவின் தாயார் மோகனாம்பாள் (48) ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதையடுத்து அருகில் இருந்த போலிஸார் அவர்களைக் காப்பாற்றி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலிஸ் விசாரணைக்கு சென்ற கணவர் மாயமானதால் மனைவியும், மனைவியின் தாயாரும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!