Tamilnadu

நீட் தேர்வை ரத்து செய்ய முயலாத அ.தி.மு.க அரசு : ஜெயலலிதா சிலைக்கு மனு அளித்து மாணவர்கள் போராட்டம்!

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள்.

மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சென்னை சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி மற்றும் கோவை சுபஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில், அரியலூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த விக்னேஷ் என்ற மாணவன் மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வழியுறுத்தி பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நீட் தேர்வால் மாணவர்களின் உயிர் பலியை தடுத்து நிறுத்தாத தமிழக அரசைக் கண்டித்தும், மாணவர்களின் மரணத்தை தடுத்து நிறுத்தக்கோரியும் தஞ்சை ரயில் நிலையம் எதிரில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு மனுவை அளித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வை ரத்து செய்திட முயற்சிக்காததால் ஜெயலலிதா சிலையின் கையில் மனுவை கொடுத்தவர்கள் சிலையின் காதிலும் நீட் தேர்வை ரத்து செய்து மாணவர்களின் அடுத்தடுத்த உயிர் பலிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தினர்.

நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தஞ்சை இந்திய மாணவர் சங்கத்தினரை போலிஸார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: “இன்னும் எத்தனை உயிர்கள்..? இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்?” - மு.க.ஸ்டாலின் வேதனை!