Tamilnadu

அரியர் மாணவர்கள் தேர்ச்சி? : தமிழக அரசு, யு.ஜி.சி, ஏ.ஐ.சி.டி.இ பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

அரியர் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கல்லூரிகள் காலவரையற்று மூடப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து, பிற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும், அரியர் வைத்து தேர்வு கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்களுக்கும் இதுபொருந்தும் என அறிவித்தார்.

தமிழக உயர்கல்வித்துறையின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமியும், திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவரும் பொது நல வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

அந்த மனுவில், பல்கலைகழக செனட் மற்றும் சிண்டிகேட் ஆகியவற்றிற்கு மட்டுமே தேர்வை நடத்தவும் ரத்து செய்யும் அதிகாரம் உள்ளதாகவும், அரியர் தேர்வுகளை தள்ளி வைக்கவோ, தாமதப்படுத்தவோ முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், பேரிடர் மேலாண்மை விதிகளின்படி உத்தரவுகளை பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதென உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் வாதிட்டார்.

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக இல்லாத பட்சத்தில் தமிழக அரசு முடிவெடுக்கலாம் எனவும், இறுதி பருவ தேர்வைத்தான் ரத்து செய்யக்கூடாது என யு.ஜி.சி கூறியுள்ளதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

Also Read: AICTE கடிதத்தை உடனே அனுப்பிவிட்டோம்; அமைச்சரின் மறுப்பு குறித்து கூற முடியாது : அண்ணா பல்கலை. துணைவேந்தர்