Tamilnadu

AICTE கடிதத்தை உடனே அனுப்பிவிட்டோம்; அமைச்சரின் மறுப்பு குறித்து கூற முடியாது : அண்ணா பல்கலை. துணைவேந்தர்

கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டதால் இறுதி செமஸ்டர் தேர்வை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

கல்லூரி தேர்வுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், அந்த தேர்வுகளை எழுதுவதற்காக கட்டணம் செலுத்தி இருந்தாலே, தேர்வெழுத விலக்கு அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு.

இந்நிலையில், அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியர் மாணவர்களுக்கு தமிழக அரசு தேர்ச்சி வழங்கியதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் அதுபோல எந்த கடிதமும் தங்களுக்கு வரவில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுத்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடமிருந்து கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கடிதம் வந்ததாகவும் அன்றைய தினமே உயர்கல்வித் துறைக்கு அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கடிதம் வரவில்லை என்று மறுத்த பின்பு மீண்டும் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடிதம் வரவில்லை என்று அமைச்சர் மறுத்தது குறித்து தன்னால் எதுவும் கூற முடியாது என்றும் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் ஒப்புதல் பெறாமல் பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகள் குறித்து தமிழக அரசு அவசர கதியில் வெளியிட்ட அறிவிப்பால் தற்போது மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Also Read: “கட்டணத்தை செலுத்த அண்ணா பல்கலை. 3 நாள் கெடு விதித்திருப்பது மனிதநேயமற்றது” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!