Tamilnadu
இரு மொழிக்கொள்கை எனக்கூறும் அதிமுக அரசு இந்திக்கு வெண்சாமரம் வீசுவது ஏன்? - கேள்விகளால் திமுக MLA விளாசல்
சமஸ்கிருதம் பயிலும் 200 மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறுவது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை விடுத்திருக்கும் சுற்றறிக்கைக்கு கேள்விகளால் துளைத்தெடுத்துள்ள முன்னாள அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
“பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஒரு பிரிவாக இயங்கும் தொழிற்கல்விக்கான இணை இயக்குநர் அவர்களது சுற்றறிக்கை ஒன்றைக் கண்ணுற்றுக் கடும் அதிர்ச்சி அடைந்தேன்.
தமிழ்நாட்டில், பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ‘சமஸ்கிருதம்’ பயிலும் 200 மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இந்தக் கல்வியாண்டில் அதனைப் பெறுவதற்குத் தகுதியான மாணவர்களின் பட்டியலை அனுப்பி வைத்திட வேண்டியும், அத்தகைய பட்டியலைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை விளக்கியும், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( தொழிற்கல்வி) அவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இந்த சுற்றறிக்கையினை அனுப்பி இருக்கின்றார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கையே இந்த அரசின் மொழிக் கொள்கை என்று ‘ வாய் வீரம்’ காட்டும் எடப்பாடி அரசு, திரை மறைவில் எத்தகைய ஏமாற்று வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பதற்கு இந்த சுற்றறிக்கையே நல்ல சான்று.
பள்ளிக் கல்வி அமைச்சருக்கு இது குறித்து சில கேள்விகளை நான் முன்வைக்க விரும்புகிறேன்.
1) தமிழ் நாட்டில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்க அரசு ஆணையிட்டு இருக்கின்றதா?
2) ஆம் எனில், எத்தனை பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படுகின்றது? எந்தெந்த பள்ளிகளில்; எந்தெந்த வகுப்புகளில்; எத்தனை ஆண்டுகளாக சமஸ்கிருதம் கற்றுத்தரப்படுகின்றது?
3) அவ்வாறெனில், சமஸ்கிருதம் கற்றுத்தர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார்களா? எத்தனை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார்கள்? எப்போது, எந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்கள்?
4) மேற்குறித்த வகுப்புகளில் எத்தனை மாணவர்கள் இப்போது சமஸ்கிருதம் படித்துக்கொண்டிருக்கின்றார்கள்?
5) கடந்த ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் இந்த உதவித் தொகை பெற்றிருக்கின்றார்கள்?
6) ‘ஓரியண்டல் பள்ளிகளைத் தவிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழியங்கும் ஏனைய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்றுத் தருவது குறித்து கொள்கை அளவில் அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கின்றதா?
7) சமஸ்கிருதம் அவ்வாறு எந்தப் பள்ளியிலும் கற்றுத்தரப்படவில்லை எனில் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து “ இன்மை அறிக்கை” பெற வேண்டிய அவசியம் என்ன?
இந்திக்கு வெண்சாமரம் வீசியும்; சமஸ்கிருதத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்தும் வரவேற்க எப்போதும் தயார் நிலையில் இருந்துகொண்டு, மத்திய பிஜேபி அரசின் கருணை மிக்கக் கண்ணசைவில் தங்கள் காலட்சேபத்தை நடத்திக்கொண்டிருக்கும் அதிமுக அரசை நோக்கி இதைப்போல ஆயிரமாயிரம் கேள்விகள் எழத்தான் போகின்றன.
அன்னைத் தமிழை அழிக்க வகை செய்து, புறவாசலைத் திறந்து இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தமிழகத்தில் ஊடுருவச் செய்யும் இத்தகைய இழி செயலுக்குத் துணைபோகும் தமிழக ஆட்சியாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தாய்த் தமிழ்நாடு ஒருபோதும் உங்களை மன்னிக்காது என்பது மட்டுமல்ல; துரோகச் செயலுக்குத் துணை போன மீர் ஜாபர்களாகவே வரலாறு உங்களை அடையாளம் காட்டும்.” இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!