Tamilnadu

மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிடில் கடும் அபராதம்: அவசரம் சட்டம் இயற்ற தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் கொரோனா காரணமாக மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு செயல்பாடுகளுக்கு தளர்வுகள் வழங்கியுள்ளதால் பொது வெளியில் மக்கள் நடமாட்டம் இன்னும் அதிகரித்துள்ளது.

ஆகையால், வெளியே வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அவசர சட்டம் ஒன்றினை பிறப்பிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் புது விதிகளை சேர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் வகையில் வகை செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கான ஆளுநர் ஒப்புதல் பெற்ற பிறகு ஓரிரு நாளில் சட்டமாக கொண்டுவர உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், 5 மாதங்களாக முழு ஊரடங்கால் வேலையின்றி தவித்து வந்த மக்களுக்கு இந்த ஊரடங்கு தளர்வின் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க ஆயத்தமாகி வரும் வேளையில் அபாரதம் என்ற ஒன்றினை ஏற்படுத்தி அவர்களின் மீது மேன்மேலும் சுமையை கூட்டுவதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

முன்னதாக தமிழகத்தில் கடந்த 160 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரை ரூ. 22,20,18,843 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 10,04,550 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,99,826 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 9,06,939 வழக்குகள் பதிவாகின என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Also Read: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மோடி அரசு படுதோல்வி: இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83,883 பேர் பாதிப்பு!