Tamilnadu
“ஆன்லைன் வகுப்பால் தொடரும் உயிர்பலி”: 3 பேருக்கும் ஒரே செல்போன்; சகோதரிகளுக்குள் தகராறு - ஒருவர் தற்கொலை!
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரையும், கல்லூரிகளும் இணைய வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன.
அதே போல கலைக் கல்லூரிகள், தொழிற் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள், இணைய வழி கற்பித்தல் முறையைப் பின்பற்றி வரத் தொடங்கியுள்ளன. இதில் மழலையர் பள்ளி தொடங்கி, பள்ளிக் கல்வி இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு இணைய வழி கற்பித்தல் என்பது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்ற நிலை தொடர்கிறது.
மேலும், இணையவழிக் கல்வி ஆபத்தானது என்றும், அது மாணவர்களுக்கிடையே பாகுபாட்டினை வளர்க்கும், இணைய வழிக்கல்வி வகுப்பறை கல்விக்கு மாற்றானது அல்ல என்றும் தி.மு.க., தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பற்ற ஏழை எளிய குழந்தைகள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் குற்றம் சாட்டினார். குறிப்பாக, ஆன்லைன் வகுப்புக்கு தேவையான மொபைல், இணைய வசதி மற்றும் தொலைக்காட்சி போன்ற எந்த வசதிகளும் இல்லாத ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது அரிதான ஒன்றாக மாறிப்போயுள்ளது.
இதனால் செல்போன் இல்லாத மாணவர்கள் கல்வி பெற முடியாத வருத்தத்தில் மனமுடைந்து பலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக ஆன்லைன் வகுப்பால் தமிழகத்தில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே செல்போனை ஆன்லைன் வகுப்புக்கு பயன்படுத்தி வந்த சகோதிரிகளையே ஏற்பட்ட தகராறில் மூத்த சகோதரி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டுநன்னாவரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் விவசாய கூலியாக பணியாற்றி வருகின்றார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
அதில் மூத்த மகள் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் படிப்பில் இரண்டாம் ஆண்டும், 2வது மகள் 12ம் வகுப்பும் மற்றும் மூன்றாவது மகள் 8ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆறுமுகத்தின் மூன்று மகள்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெறுவதால் வறுமையின் காரணமாக மூன்று பேருக்கும் ஒரே ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார்.
வேலையில்லாததால் தற்போது இந்த ஒரு செல்போனை பயன்படுத்தி மூன்று பேரும் வகுப்புகளில் பங்கேறுங்கள், பகிர்ந்து படியுங்கள் என அறிவுறுத்தியுள்ளார் ஆறுமுகம். இந்த நிலையில், கடந்த 25ம் தேதி மூத்த மகளுக்கு ஆன்லைன் வகுப்பு நீண்ட நேரம் நடந்ததால் மற்ற இருவருக்கும் செல்போனை தராமல் இருந்துள்ளார்.
Also Read: “ஆன்லைன் கல்வி மூலம் மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதா?” -அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
இதனால் இரண்டாவது மகளுக்கும் மூத்த மகளுக்கும் சண்டை நடந்துள்ளது. அப்போது இரண்டாவது மகள் இதுகுறித்து தந்தை ஆறுமுகத்திடமும் கூறிய போது, அவர் மூத்த மகளிடம் நீ மட்டுமே ஏன் பயன்படுத்தி வருகிறாய்; இரண்டாவது மகளுக்கு ஸ்மார்ட்போன் கொடு என்று கோபமாக பேசியுள்ளார்.
இதனால் ஆறுமுகத்திற்கும், மூத்த மகளுக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டுள்ளது. தந்தை தன்னை புரிந்துக்கொள்ளாமல் திட்டிவிட்டார்; ஆன்லைன் வகுப்பிலும் பங்கேற்க முடியவில்லை என்ற வருத்தத்தில், மூத்த மகள் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை முடிந்த பின்னர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு உடல்நிலை மோசமடைய மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாமாக உயிரிழந்தார்.
இணைய வழி கற்பித்தலுக்கு மின் வசதி, இணையத்தளத் தொடர்பு, கணினி, செல்போன் போன்ற வசதிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்திருக்கின்றதா? என்பதையும் பார்க்காமல் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டுவதால் இதுபோல ஏழை மாணவர்களின் தற்கொலையும் அதிகரிக்கிறது. எனவே ஆன்லைன் வகுப்புகளைத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !