Tamilnadu

ஒட்டுமொத்த திருச்சிக்கும் 2 பரிசோதனை மையங்கள்தானா? - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் அடுக்கடுக்காக கேள்வி!

திருச்சி இந்திரா நகரைச் சேர்ந்த ராஜகோபால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாதத்திற்கு பின்பு பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் கொரொனா நோய்த்தொற்று பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது. மத்திய அரசு ஊரடங்கு தளர்வு அறிவித்தபோது அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தி இருந்தது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகரித்த நிலையிலும் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை.

இந்திய மருத்துவ கூட்டமைப்பின் திருச்சி கிளை சார்பிலும், திருச்சியில் கொரோனா சமூக பரவலைத் தடுக்க உடனடியாக 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, உடனடியாக, திருச்சி மாவட்டத்தில் இரண்டு வார கால ஊரடங்கை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள், திருச்சியில் எத்தனை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத்தரப்பில் 6 என தெரிவிக்கப்பட்டது. 2 தனியார் பரிசோதனை மையங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் ஒட்டுமொத்த திருச்சி மாவட்டத்திற்கும் 2 தனியார் பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும்?

தனியார் பரிசோதனை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை தேவை என கருத்து தெரிவித்தனர். மேலும், கொரோனா பரிசோதனை முடிவுகள் எவ்வளவு நாட்களுக்குள்ளாக அறிவிக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பினர். அதற்கு ஆட்சியர் தரப்பில், அதிகபட்சமாக 2 நாட்களுக்குள் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகின்றன எனத் தெரிவித்தார்.

Also Read: CAA எதிர்ப்பு போராட்டம்: கோரக்பூர் டாக்டர், ஜேஎன்யூ மாணவிக்கு ஐகோர்ட் ஜாமின் - NSA வழக்கை ரத்து செய்ய ஆணை

மேலும் கள்ளிக்குடி காய்கறி சந்தை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, ஒரு வாரத்திற்குள் கள்ளிக்குடி காய்கறி சந்தை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளித்தார்.

மேலும் அரசு மருத்துவமனையின் கழிவுகள், உய்யக்கொண்டான் கால்வாயில் கலப்பதாக தெரியவருகிறது.

1. திருச்சி மாவட்ட எல்லைக்குள் செல்லும் உய்யக்கொண்டான் கால்வாயின் தூரம் எவ்வளவு?

2. உய்யக்கொண்டானில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலக்கப்படுகிறதா?

3. எத்தனை இடங்களில் கழிவுநீர் கலக்கின்றன?

4. தரம் எவ்வாறு உள்ளது?

என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் திருச்சி NIT சார்பில் ஆய்வு செய்து பதிலளிக்க செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: 40%-க்கு மேல் கட்டணம் வசூலிப்பு: தனியார் பள்ளிகள் மீதான நடவடிக்கை என்ன? தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை