Tamilnadu

ஸ்டெர்லைட் கலவரம்: பாதிக்கப்பட்டோருக்கு அரசு வேலை ஒதுக்குவதில் பாரபட்சம் - ஒரு நபர் ஆணையத்தில் புகார்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு கலவரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

20 கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் ஒரு நபர் ஆணையத்தின் 21ஆவது கட்ட விசாரணை தற்போது தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு கலவரம் குறித்து சாட்சியங்கள் அளிப்பதற்காக அரசு அலுவலர்கள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை பாரபட்சமாக வழங்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலையை மறுபரிசீலனை செய்து கல்வித்தகுதிக்கு ஏற்றபடி இளநிலை உதவியாளர் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் ஒரு நபர் ஆணையத்தில் நீதிபதி அருணா ஜெகதீசனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவிலேயே சுற்றுச்சூழலுக்காக போராடி உயிரிழந்த வரலாறு என்றால் அது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கலவரத்தில் உயிரிழந்ததை உயிரிழந்தவர்களை தான் குறிக்கும்.

அப்படிப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணமாக தலையாரி வேலையை வழங்கியுள்ளது. ஆனால் சமீபத்தில் சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த நபருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் வேலை வழங்கப்படவில்லை.

எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலையை மறுபரிசீலனை செய்து கல்வித்தகுதி அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த 13 பேரின் நினைவாக நினைவு மண்டபம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

Also Read: “ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் பணியை மேற்கொள்க” - தமிழக அரசு எடுக்கவேண்டிய 8 முக்கிய நடவடிக்கைகள்!