Tamilnadu

IAS தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பெண்ணின் கண் பார்வைக்கு உதவும் தி.மு.க MLA சரவணன் !

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பூரண சுந்தரிக்கு கண்பார்வைக்கு உதவும் அதிநவீன ஆர்கேம் கருவியினை வழங்க திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர்.சரவணன் ஏற்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரவணன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “IAS தேர்வில் வெற்றி பெற்ற செல்வி.பூரண சுந்தரி அவர்களின் கண்பார்வைக்கு உதவும் அதிநவீன ORCAM கருவியினை வழங்க ஏற்பாடு செய்துள்ளேன்.

மதுரை மணிநகரத்தைச் சேர்ந்த செல்வி.பூரண சுந்தரி அவர்கள் IAS தேர்வில் இந்திய அளவில் 286வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அவர் சிறு வயதிலேயே கண்பார்வை குறைபாடு இருந்த போதும் IAS தேர்வில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 18.08.2020 அன்று அவரது வீட்டிற்கு நேரில் சென்று எனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தேன்.

அதனை தொடர்ந்து, இணையதளம் மூலம் அந்த பெண்னிற்கு eSIGHT என்ற சுமார் 8 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்ணாடியினை கனடா நாட்டில் இருந்து வரவழைத்து பார்வை கிடைக்க செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தேன்.

எனவே அப்பெண்னை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தோம். பரிசோதனையில் அவருக்கு பார்க்கும் அனைத்தும் ஒலியாக கொண்டு செல்லும் ORCAM என்ற அதிநவீன கருவியை பொருத்தலாம் என்று மருத்துவர்கள் குழு ஆலோசனை வழங்கினர்.

3 லட்சம் மதிப்பிலான ORCAM கருவியை எங்களது சூர்யா தொண்டு நிறுவனம் மூலம் வழங்க ஏற்பாடு செய்து இன்று (22.08.2020) அதற்கு முன்னோட்டம் பார்த்தோம்.

கண்ணொளி திட்டம் கொண்டு வந்த தமிழினத்தலைவர் டாக்டர்.கலைஞர் அவர்கள் வழியில் செயல்படும் கழகத் தலைவர் மாண்புமிகு.தளபதியார் அவர்களின் கரங்களால் ORCAM கருவியை செல்வி.பூரண சுந்தரி அவர்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளேன்.

மேலும், அதிநவீன ORBIT READER என்ற எளிதாக படிக்க உதவும் BRAILLE கருவியினையும் வழங்க உள்ளோம். எங்களது சூர்யா தொண்டு நிறுவனம் மூலம் இது போன்று கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் ELECTRONIC GADGETS பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தம்பி படிப்புக்காக காய்கறி விற்ற மாணவி - வீடுதேடி உதவி செய்த தி.மு.க எம்.எல்.ஏ” : நெகிழ்ச்சி சம்பவம்!