Tamilnadu

பின்வாங்கிய கோவை மாநகராட்சி: ‘இந்தி படிக்க விரும்புகிறீர்களா’ என வெளியான விண்ணப்பம் போலி? - நடந்தது என்ன?

இருமொழிக் கொள்கை தொடரும் என முதல்வர் கூறிய நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் இந்தி படிக்க விரும்புகிறீர்களா என கேள்வி இருந்ததால் சர்ச்சை உருவாகியுள்ளது.

மோடி அரசின் மத்திய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கைக்கு அனுமதி அளித்துள்ளது. மோடி அரசின் இந்த கல்விக் கொள்கை இந்தியை திணிக்கும் நோக்கத்தில் உள்ளதாகவும், ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் செயலாக உள்ளது எனவும் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தாலும், மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதி கிடையாது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழக அரசின் இத்தகைய அறிவிக்கு அ.தி.மு.கவின் கூட்டணி கட்சியான பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு வழங்கப்பட்ட படிவத்தில், மூன்றாவது மொழியாக இந்தி படிக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி இடம்பெற்றிருந்த விண்ணப்பம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவிக்க ஆரம்பித்தனர். இதனையடுத்து அந்த விண்ணப்பம் போலியானது கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பேசிய ஷர்வன் குமார், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் விண்ணப்பத்தை எந்தப் பள்ளிகளிலும் நாங்கள் விநியோகிக்கவில்லை. இந்த சம்பவத்தை நான் செய்திகள் மூலமே அறிந்தேன்.

எனவே, இந்தி மொழி படிக்க விருப்பமா என்ற கேள்வி தற்போதைய மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இடம்பெறவில்லை. அந்த விண்ணப்ப படிவம் நான் பதவியேற்ற பின்பு வெளியிடப்படவில்லை. நான் இதை கொடுக்க உத்தரவிட்டிருந்தால் எல்லா பள்ளிகளிலும் இந்த விண்ணப்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவ்வாறு இல்லை. ஒரு பள்ளியில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விண்ணப்பம் போலியானது. மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை தலையீடு இல்லாமல் நடைபெறாது. அப்படியான சூழல் இருக்கையில், கோவையில் பிரபலமான அரசுப் பள்ளியில் இப்படி ஒரு விண்ணப்பம் கொடுக்கப்படுகிறது என்றால், மாநகராட்சி நிர்வாகம் ஏன் இதனை முன்கூட்டியே கண்டுகொள்ளவில்லை எனக் கேள்வி எழுந்துள்ளது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்போது அரசு வகுத்துள்ள விதிமுறைகள் உள்ளிட்ட தகவல்களை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். ஒரு பள்ளியில் நடந்த தவறாக இதனை எடுத்துக்கொள்ளக் கூடாது என கல்வியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Also Read: கள்ளழகர் விழா நடைபெறவில்லை; அப்போது யாரும் போராடவில்லை: பிள்ளையார் சதுர்த்திக்கு மட்டும் துடிப்பது ஏன்?