Tamilnadu

“சென்னையில் ஒரே நாளில் ரூ.33.50 கோடி மது விற்பனை” - குடும்பங்களை சீரழிக்கும் அ.தி.மு.க அரசு!

டைகதமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களாக ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி வருகிறது.

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படாலும் மக்களின் வாழ்வு சீராகவில்லை. குறிப்பாக, ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இன்னல்களையும் சீர் செய்வதற்காக போதுமான திட்டங்களையும் அரசு வகுக்கவில்லை.

இந்நிலையில், கொரோனா தொடர் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்பிறகு தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களில் கடைகள் திறக்கப்பட்டாலும் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஐந்து மாதங்களுக்குப் பிறகு நேற்று சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் காலை முதல் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் குவியத் தொடங்கினர். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க கட்டை வைத்து கட்டப்பட்டிருந்தது.

மது வீட்டிற்கு கேடு நாட்டிற்கும் கேடு என டாஸ்மாக் கடையில் ஒரு பக்கம் எழுதப்பட்டிருந்தாலும், மறுபக்கம் சிவப்புக் கம்பளம் விரித்து குடிமகன்களை கூவிக் கூவி அழைக்கும் ஒரே அரசு தமிழக அரசு தான்.

கொரோனா அதிகமுள்ள சென்னையில் டாஸ்மாக் திறக்க வேண்டாம் என பல திசைகளில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் வந்துகொண்டு இருக்க, டாஸ்மாக் கடைகளில் வரும் குடிமகன்கள் சுத்தத்தை கடைபிடிக்க ஒவ்வொருவரும் சானிடைசர் மூலம் கைகளைக் கழுவிய பிறகு தான் மதுக்கடைக்குள் செல்லவேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என விதிமுறைகளோடு தமிழக அரசு கடைகளைத் திறந்துள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கையால் நேற்று திறக்கப்பட்ட 720 கடைகள் மூலமாக மொத்தமாக 33 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

சென்னையில் மீண்டும் டாஸ்மாக் கடையை திறந்ததற்கு பெண்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.

“ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வேலை இழந்து, பசியோடு வாடிவரும் இந்த வேளையில், தினக் கூலிகளாக வேலை செய்யும் எங்கள் குடும்பத்தில் கணவர் குடிப் பழக்கத்துடன் இருந்தார். ஊரடங்கு உத்தரவால் சில மாதங்களாக குடி பழக்கம் இல்லாமல் இருந்தது.

சென்னையில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறந்தவுடன் வீட்டில் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை பிடுங்கி, நகைகளை அடகு வைத்து குடிக்க ஆரம்பித்துவிட்டார். தினந்தோறும் வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது.” எனப் பல பெண்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

குடித்துவிட்டு வந்து தங்கள் கணவர்கள், சகோதரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களை தாக்குவதாகவும் அரசாங்கம் தங்கள் மீது சற்றும் அக்கறை இல்லாமல் டாஸ்மாக் கடைகளை திறந்து பல பிரச்சினைகளுக்கு வழிவகை செய்து விட்டதாகவும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் திறந்தால், பொது போக்குவரத்தை அனுமதித்தால், கொரோனா வரும் எனக் கருதும் அரசு, டாஸ்மாக் கடையை திறந்தால் கொரோனா வராது எனச் சொல்கிறதா எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Also Read: சென்னையில் டாஸ்மாக் திறக்கலாம்: “கஜானாவை நிரப்புவதற்காக தாய்மார்களின் கண்ணீரை விலைகேட்கும் எடப்பாடி அரசு”