Tamilnadu
"கடமை உணர்வின் அடையாளமாகத் திகழும் காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி" - மு.க.ஸ்டாலின் பாராட்டு!
தந்தை இறந்த தகவலறிந்தும் சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பை சிறப்பாக நடத்திய காவல் ஆய்வாளர் மகேஸ்வரிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற விடுதலை நாள் கொடியேற்று விழாவின்போது, தமது தந்தை இறந்துவிட்டார் என்ற வேதனை மிகுந்த செய்தியை அறிந்த பிறகும் கலந்துகொண்டு தமது கடமையை நிறைவேற்றி, கடமை உணர்வின் அடையாளமாகத் திகழும் காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களைப் பாராட்டி நேற்று கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அக்கடித விவரம் வருமாறு :
"கடமை உணர்வின் அடையாளமாகத் திகழும் காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களுக்கு, வணக்கமும் வாழ்த்துகளும்!
கம்பீரமான காக்கி உடுப்பை அணிந்தபிறகு வீட்டுச் சூழ்நிலை எப்படி இருந்தாலும், நாட்டு நிலையும் - பொதுமக்களின் பாதுகாப்புமே முதன்மையானது என்பதை உணர்ந்து செயலாற்றுபவர்களே சிறப்பான காவல் அதிகாரிகளாகத் திகழ்கிறார்கள்.
தமிழக காவல்துறை எத்தனையோ சிறப்பான காவல் அதிகாரிகளைத் தந்த மாநிலமாக; இந்தியாவுக்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது.
அந்த வகையில், தங்களின் தந்தையார் நாராயணசாமி அவர்கள் இறந்துவிட்டார் என்ற வேதனை மிகுந்த செய்தியை அறிந்த பிறகும், ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை நாளில் நிறைவேற்ற வேண்டிய கடமையை நிறைவேற்றும் வகையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கொடியேற்று விழாவில், காவல்துறையின் அணிவகுப்பை சிறப்பாக நடத்தி, வாள் சுழற்றி சல்யூட் வைத்து, கடமையுணர்ச்சியின் சிகரமாகத் திகழ்ந்ததை தமிழகமே போற்றுகிறது.
பாசத்தைவிட கடமையே முக்கியம் என்பதை காவல்துறையில் தங்களின் கீழ் பணியாற்றும் மற்றவர்களுக்கும், இனி இந்தப் பணியில் சேர ஆர்வமாக உள்ள தலைமுறையினருக்கும் உணர்த்தியிருக்கிறீர்கள்.
காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு துணை ஆய்வாளராக உள்ள தங்கள் கணவரும் குழந்தைகளும் தங்களின் கடமைக்குத் துணை நின்றதை அறிந்த போது மேலும் மதிப்பு கூடியது.
வேதனையை விழுங்கிக்கொண்டு, தேசத்தின் பெருமைக்குரிய தினத்தின் சிறப்பைப் போற்றும் வகையில் செயலாற்றிய தங்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும் தெரிவித்து, தந்தையாரை இழந்து வாடும் தங்களின் துயரில் பங்கேற்கிறேன்.
காக்கிச் சீருடைக்குரிய கம்பீரமான பணிகள் தொடரட்டும்!"
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!
-
வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு தி.மு.க MPக்கள் கேள்வி!