Tamilnadu

குற்றங்களை கண்காணிக்க பொருத்திய சிசிடிவி கேமிராக்களை திருடிய பலே திருடன்: சென்னையில் நூதனம்!

சென்னை சிட்லபாக்கம், அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதையடுத்து குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காகவும், கண்டறிவதற்காகவும் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமிராக்களை பொருத்தினர்.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாகவே அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை மட்டுமே குறிவைத்து மர்ம நபர்கள் சேதப்படுத்தி அதனை திருடியும் சென்று வந்திருக்கிறார்கள்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி கேமிரா திருடுவதற்கு முன் சிசிடிவி கேமிராவில் திருடனின் முகம் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலிசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சிசிடிவி கேமிராவில் பதிவான நபர் திரு,வி.க.நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (24) என தெரியவந்தது. இதையடுத்து போலிசார் அவரை கைது செய்து சிசிடிவிக்களை திருடி சென்றது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அஸ்தினாபுரம் அப்பகுதியில் டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை செய்து வந்ததாகவும், குடிப்பதற்கு பணம் இல்லாததால் சிசிடிவி கேமிராவை திருடி விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து மது வாங்கி குடிக்கலாம் என்று நினைத்து அவ்வாறு செய்ததாகவும் தங்கராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர் அவரிடமிருந்து 3 சிசிடிவி கேமிராக்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: “அடுத்தடுத்து கொலை; கொள்ளை : சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு” - எடப்பாடி அரசை விளாசும் மு.க.ஸ்டாலின்!