Tamilnadu

“டாஸ்மாக் கடைகளைத் திறந்ததில் பொதுநலன் ஏதுமில்லை” - அ.தி.மு.க அரசுக்கு ஐகோர்ட் கிளை குட்டு!

தேனி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் திடீர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த கோபால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தேனி ஆண்டிபட்டி அன்னை சத்யா நகர் பகுதியில் அரசு அலுவலகங்களும், பள்ளி, கல்லூரிகளும், வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. மேலும் தேனியிலிருந்து ஆண்டிபட்டி செல்லும் சாலையும், வைகை அணைக்குச் செல்லும் சாலையும் இந்த பகுதி வழியே செல்வதால் எப்போதும் மக்கள் நெருக்கத்துடனேயே இப்பகுதி உள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் தற்போது பசுமை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்பில் டாஸ்மாக் கடையும், போதை மறுவாழ்வு மையத்தின் அருகில் மதுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு, அன்னை சத்யா நகர் பகுதியில் அமைந்துள்ள மதுக்கடை மற்றும் மதுக்கூடத்தை உடனடியாக மூட உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, டாஸ்மாக்கின் வருமானம் மூலம் அரசு சில நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், டாஸ்மாக் கடைகள் திறந்ததில் பொதுநலன் ஏதுமில்லை எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மதுக்கூடங்களில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக அகற்றப்படுகிறதா? மது அரசு நிர்ணயம் செய்த விலையில் தான் விற்கப்படுகிறதா? மதுக்கடைகளில் கூட்டத்தை முறைப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கிருமி நாசினி பயன்படுத்தப்படுவது உள்ளிட்டவற்றை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

மேலும், தேனி மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் திடீர் ஆய்வு செய்து இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: சென்னையில் சேமிக்கப்பட்டிருக்கும் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் - லெபனான் விபத்தால் மக்கள் அச்சம்!