Tamilnadu

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்தி கொலை; புதுச்சேரியில் பயங்கரம்

கொரோனா ஊடரங்கு காரணமாக வேலைக்கும், தொழிலுக்கும் செல்ல முடியாமல் பலர் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. அதேபோல வாடகைக்குக் குடியிருக்கும் குடும்பத்தினர் வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் பெருந்தன்மையாக நடந்துகொண்டாலும், பலர் சூழலைப் புரிந்துகொள்ளாமல் குடியிருப்பவர்களிடம் வாடகையைத் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளனர். இதனால் பல நேரங்களில் அதில் சண்டையாக மாறி வன்முறையில் சென்று முடிவது சமீப நாட்களாக தொடர்ந்து வருகிறது.

அவ்வகையில், புதுச்சேரியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் இறைச்சிக் கடை ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக அருணுக்கு வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் அடிக்கடி அருணுக்கும், உரிமையாளர் புருஷோத்தமனுக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு புருஷோத்தமன் அருணின் வீட்டிற்கு வாடகை கேட்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பு வரை சென்றிருக்கிறது. ஒரு கட்டத்தில் அருண் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து புருஷோத்தமனை குத்தி கொலை செய்திருக்கிறார்.

இதனையடுத்து சிகிச்சைக்காக புருஷோத்தமன் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த புதுச்சேரி கோரிமேடு காவல்துறையினர் அருணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.