Tamilnadu

குழாய் மூலம் எடப்பாடிக்கு காவிரி நீர்: மேட்டூர் விவசாயிகளை பாதிக்குமா? - தமிழக அரசின் பதில் இதுதான்!

காவிரியின் நீரை எடப்பாடிக்கு குழாய் மூலமாக கொண்டு செல்வதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மேட்டூர் பாசன விவசாயிகளை பாதிக்காது என தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது மேலும் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 24-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த பி.ஆர். பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரை கொண்டு பாசன வசதி பெறுகின்றன. உச்சநீதிமன்றம் 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசு கடந்த 2019 நவம்பர் 12ஆம் தேதி பொதுப்பணித் துறை சார்பில் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி டெல்டா பாசனத்திற்காக வழங்கப்படும் தண்ணீரில், உபரி நீரை குழாய் மூலமாக எடப்பாடிக்கு கொண்டு செல்லவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் இது தொடர்பாக சட்டமன்றத்தில் எவ்விதமான விவாதத்தையும் நடத்தாமல் அவசரமாக இந்த அரசாணையை பிறப்பித்துள்ளார். தனது சொந்த தொகுதிக்கு மட்டும் நன்மையை செய்யும் வகையில், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு காவிரியின் உபரி நீரை எடப்பாடிக்கு குழாய் மூலமாக கொண்டு செல்வதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக பொதுப்பணித் துறையின் சிறப்பு செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில் சேலம் மாவட்டத்தில் 4 தாலுக்கா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீராக 0.555 டிஎம்சி தண்ணீர் மட்டுமே எடுக்கப்பட்ட உள்ளது.

இது தீர்ப்பாயத்தின் உத்தரவில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. இது எவ்விதத்திலும் மேட்டூர் பாசன விவசாயிகளை பாதிக்காது எனக் கூறியிருந்தார்.

மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதி ஒத்தி வைத்தார்.

Also Read: நியூஸ் 18 முதன்மை ஆசிரியர், பணியாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டு... மாரிதாஸுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை!