Tamilnadu

வாடகை கொடுக்காதவரை போலிஸை விட்டு தாக்கிய அதிமுக பிரமுகர் : மனமுடைந்த பெயிண்டர் தீயிட்டு தற்கொலை முயற்சி!

திருவள்ளுர் மாவட்டம் புழல் அடுத்து விநாயகபுரம் பால விநாயகர் கோவில் தெரு சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த ஆறு மாத காலமாக வாடகைக்கு சீனிவாசன் (40) என்பவர் வசித்து வந்தார்.

இவர் பெயிண்டர் ஆக பணியாற்றி வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இதனால் மூன்று மாதங்களாக வீட்டுவாடகைக் கொடுக்க முடியாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் வாடகைக் கொடுக்காமல் இருந்து வந்த சீனிவாசனை வீட்டை காலி செய்யுமாறு ராஜேந்திரன் கூறியுள்ளார். இந்த சூழலில் சீனிவாசன் வீட்டை காலி செய்ய மறுத்ததால் ராஜேந்திரன் புழல் காவல் நிலையத்தில் கடந்த 29ம் தேதி புகார் கொடுத்துள்ளர்.

இந்நிலையில் புழல் போலிஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் நேற்று மதியம் சம்பவ இடத்தில் வந்து சீனிவாசனிடம் விசாரிக்க சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மனைவி மற்றும் 2 மகள்கள் முன்னால் போலிஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் சீனிவாசனைத் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் அவமானத்தைத் தாங்க முடியாமல், சீனிவாசன் நேற்று இரவு 11.30 மணியளவில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முன்றார், தீயால் அவதிப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 86% தீக்காயங்கள் காரணமாக அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரித்து வருகின்றனர். போலிஸார் தன்னை தாக்கியதால் தான் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக அவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் குடியிருப்பவர்களிடம் வாடகை வசூலிக்வேண்டாம். வீட்டைவிட்டும் வெளியேற்றக்கூடாது என அரசாங்கம் கூட வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அ.தி.மு.க பிரமுகரின் புகாரை ஏற்று போலிஸார் சிவில் விவகாரத்தில் தலையிட்டுள்ளது பொருத்தமற்றது. அதுமட்டுமல்லாது வாடகை கொடுக்காதவரை அடித்து கொல்லும் இதேபோலிஸார் தான், சென்னையில் பார்கிங் பிரச்சனையின் போது பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து, அருவருப்பான செயலில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி தலைவர் டாக்டர் சுப்பையாவை எதுவும் செய்யாமல் வேடிக்கைப் பார்த்தது.

அதிகாரம் படைத்தவர்களிடம் அடங்கிப்போகும் போலிஸார், வேலையில்லாமல் தவித்து வரும் ஏழைகளை அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இனியும் தமிழக அரசு இதுபோன்ற கொடூமைகளை வேடிக்கை பார்க்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பக்கத்து வீட்டு பெண்ணுடன் மோதல் : அநாகரிகமாக நடந்துகொண்ட ஏ.பி.வி.பி தேசிய தலைவர் - வெளிவந்த CCTV காட்சி!