Tamilnadu

“மரத்தின் மீது அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்”: சிக்னல் கிடைக்காததால் அரங்கேறும் அவலம்!

கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பற்ற ஏழை எளிய குழந்தைகள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் தெரிவித்து வந்தனர்.

மேலும், ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்கியுள்ளனர். தனியார் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களே ஸ்மார்ட் போன், அதிவேக இணைய வசதி இன்றி, பள்ளிகளால் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், எவ்வித மாற்று ஏற்பாடும் இன்றி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை அவசர அவசரமாகத் துவக்குவது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், அடிப்படை வசதிகள் இல்லாமலும், மொபைல் போன் கோபுரத்தில் சிக்னல் கிடைக்காததால், மரத்தின் மீது ஏறி அமர்ந்து கடும் குளிரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் அவல நிலை கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில் நடந்துள்ளது.

பசுமை நிறைந்த நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது ஓவேலி பேரூராட்சி. பழங்குடியினர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வாழும் இந்த பகுதி முழுவதும் பசுமை நிறைந்த காடுகள் உள்ளன.

இந்நிலையில், வனத்துறை அனுமதியுடன் சந்தன மலை என்ற பகுதியில் மட்டும் ஒரே ஒரு பி.எஸ்.என்.எல் மொபைல் போன் கோபுரம் உள்ளது. கடந்த சில மாதங்களாக சரியான பராமரிப்பு இல்லாமல் இந்த செல்போன் கோபுரம் உள்ளதால் அப்பகுதியில் இரண்டு மாதமாக செல்போன் சேவை அவ்வப்போது துண்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது பள்ளி மாணவ மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் நிலையில், செல்போன் கோபுரத்தின் சிக்னல் கிடைக்காததால் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூடலூர் பகுதியில் அமைந்துள்ள கோபுரத்திலிருந்து போன் சிக்னல் சில இடங்களில் கிடைக்கும்.

அதற்காக நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் யானை காட்டில் நடந்து சென்று உயர்ந்த பாறைகள் மீதும், உயர்ந்த மரங்கள் மீது ஏறி அமர்ந்து கல்வி கற்கும் அவலநிலை நீலகிரி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

எனவே தமிழக அரசு தோட்டத் தொழிலாளர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செல்போன் கோபுரத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Also Read: “ஆன்லைன் வகுப்பு நடத்துவது தவறானது; இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு” - Dr.கஸ்தூரிரங்கன் அதிர்ச்சி தகவல்!