Tamilnadu

“மூடப்பட்ட மருந்தகங்கள், மருத்துவமனைகளை திறக்க வேண்டும்” : பென்னாகரம் தி.மு.க எம்.எல்.ஏ வலியுறுத்தல்!

பென்னாகரம் பகுதியில் கொரோனாவினால் தடை செய்யப்பட்ட மக்களுக்கு, மருத்துவம், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பென்னாகரம் தி.மு.க எம்.எல்.ஏ இன்பசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதி முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து பேரூராட்சி பகுதிக்கு செல்லும் அனைத்து வழி தடங்களையும் தடுப்பு வேலிகளை அமைத்து அடைக்கப்பட்டுள்ளது.

மேலும், பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவற்றையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாப்பது மட்டுமின்றி, நாள்பட்ட நோய்களான நிரிழிவு, இரத்த அழுத்தம், தினசரி மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு திடீர் என ஏற்படும் உடல் உபாதை பாதிப்பு போன்றவைகளுக்கு மருத்துவ உதவி கிடைக்காத நிலை உள்ளது.

மேலும் பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தங்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஊரடங்கினால் ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அவர்களின் விவசாய உற்பத்திப் பொருள்களான தக்காளி, கத்திரி, முள்ளங்கி மற்றும் கீரை வகைகள் குறுகிய நாட்களில் கெட்டுவிடும் பொருளாகும். ஆதலால் அந்த விவசாய பொருள்களை மாவட்ட நிர்வாகம் நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் அல்லது பேரூராட்சிக்கு வெளியே ஒரு பொதுவான இடத்தை தேர்வு செய்து விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் கலைஞர் ஆட்சியில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பென்னாகரம் அரசு மருத்துவமனையில், கூடுதல் மருத்துவர்களை நியமித்து கொரோனா பரிசோதனை மையத்தையும், நோயளிகளை தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல், பூரண குணமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமெனவும்,

மதுரை மாவட்டத்தில் மூடிய தனியார் மருத்துவமனைகளை திறக்க அங்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது போல் பென்னாகரம் பகுதியில் மூட உத்தரவிடப்பட்ட அனைத்து மருந்தகம் மற்றும் தனியார் மருத்துவமனைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பென்னாகரம் தி.மு.க எம்.எல்.ஏ இன்பசேகரன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read: “தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை கையாண்ட பா.ஜ.க ஐ.டி விங்” : தேர்தலில் பா.ஜ.கவின் தில்லுமுல்லு அம்பலம்!