Tamilnadu

இனச்சான்றுக்காக 10 ஆண்டுகளாக போராடும் பழங்குடியின மாணவி... விழுப்புரம் அருகே பரிதாபம்!

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் தி.பரங்கினி பகுதியைச் சேர்ந்தவர் மாணவி தனலட்சுமி. இவரது பெற்றோரான முனியாண்டி மற்றும் தாட்சாயினி இருவருமே தினக்கூலிகளாகப் பணியாற்றுபவர்கள்.

8ம் வகுப்பு வரை ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் படித்த தனலட்சுமி, அதன்பிறகு தி.பரங்கினியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுக்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பயின்று வந்திருக்கிறார்.

2018ம் ஆண்டு பத்தாம் வகுப்பில் 500க்கு 438 மதிப்பெண்களும், 2019 பதினொன்றாம் வகுப்பில் 600க்கு 388 மதிப்பெண்களும், 2020 +2ல் 354 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்.

2010ம் ஆண்டே விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியரிடமும், 2016ம் ஆண்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ எம்.சக்கரபாணியிடமும் இனச்சான்று வழங்கக் கோரி தனலட்சுமியின் தந்தை முனியாண்டி விண்ணப்பித்திருந்தார்.

வருவாய்த் துறையினர் வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டுச் சென்றுள்ளனர். அதன் பிறகு சான்றிதழ் கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையில் இருந்த தனலட்சுமிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் 2020 வரையிலும் காத்திருப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது.

தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. ஆகையால் கல்லூரி படிப்புக்கு இனச்சான்று தேவையென்பதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு தனலட்சுமி கடிதம் ஒன்றினை எழுதி மேற்கண்ட விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இனச்சான்று பெறுவதற்காக இந்து மதத்தைச் சேர்ந்த இருளர்தான் என்பதற்கான 14 ஆதாரங்களின் நகல்களையும் இணைத்துள்ளார்.