Tamilnadu

“எடப்பாடி அரசு கொள்கை முடிவெடுத்து கூட்டுறவு சங்கங்களை பாதுகாக்க வேண்டும்” - பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்!

மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொள்கை முடிவெடுத்து கூட்டுறவு வங்கிகளை பாதுகாக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் 3 அடுக்குமுறையில் செயல்படும் கூட்டுறவு வங்கி செயல்பாடுகளை முடக்கி விவசாயிகளை ஒடுக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து விவசாயிகளும், கூட்டுறவு சங்க பணியாளர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். தடைவிதிக்க மறுத்துள்ள உயர்நீதிமன்றம் கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவது சட்டவிரோதமானது என்றும் உரிய விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொள்கை முடிவெடுத்து கூட்டுறவு வங்கிகளை பாதுகாக்க வேண்டும். உயர்நீதிமன்ற வழக்கில் அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்தி சட்டப்பூர்வ அனுமதி பெற முன்வரவேண்டும்.

காவிரி டெல்டாவில் தமிழக அரசின் அறிவிப்பை நம்பி சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிப் பணிகள் துவங்கப்பட்டன. தற்போது சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் நடவு செய்ய விடப்பட்ட நாற்றுகளை நடவு செய்ய முடியவில்லை. நேரடி விதைப்பு செய்த விவசாயிகள் உரமிட முடியாமலும், விவசாயப்பணிகள் தண்ணீரின்றி தொடர முடியாமல் பயிர்கள் கருகுவதைப் பார்த்து மனமுடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை தண்ணீர் 65 அடிக்கு கீழே சரிந்துவிட்டது. இனி சம்பா சாகுபடி பணிகளையும் மேற்கொள்ள முடியுமா என்கிற சந்தேகத்தில் பரிதவிக்கின்றனர். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக குறுவையை நம்பி சம்பாவையும் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் 80%க்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் உரிய தண்ணீரை தமிழகத்திற்கு விடுவிக்க மறுக்கிறது. ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை சுமார் 61 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும். ஆனால் 9 டி.எம்.சி விடுவித்துள்ளதாக கர்நாடகம் சொல்லி தப்பிக்கப் பார்ப்பது சட்டவிரோதமானது.

எனவே உடனடியாக காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் குழு கர்நாடக, தமிழக அணைகளை நேரில் பார்வையிட்டு உரிய தண்ணீரை தமிழகத்திற்கு பெற்று கருகும் குறுவை பயிரை காப்பாற்றவும், சம்பாவை பாணிகளை துவங்குவதற்கு அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கிராமங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளை டெல்லியில் இருந்து நிர்வகிப்பதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்!