Tamilnadu

“இன்று வீட்டை விட்டு வெளியே வந்தாலே கைது?” : தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கால் கெடுபிடி காட்டும் போலிஸ்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர், மதுரை, செங்கல்பட்டிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரானா வைரஸ் நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த 100 நாட்களாக நீடித்து வரும் ஊரடங்கு உத்தரவினால் பல்வேறுபட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அத்தியாவசிய கடைகள் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தீவிரமடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 12 நாட்கள் ஜூன் 30-ஆம் தேதி வரை 5ம் கட்டமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் 6ம் கட்டமாக ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கில் கடைகள் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி, போக்குவரத்து இயங்க அனுமதி என பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் 31ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளில் எந்த வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் ஞாயிற்று கிழமை முதல் எந்த வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதனடிப்படையில் இரண்டாவது முறையாக இன்றும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலைகளில் சுற்றித் திரிபவர்களும், வீட்டு வாசலில் அமர்ந்து கதை பேசுபவர்களும், முக கவசம் அணியாமல் வெளியில் நிற்பவர்களையும் போலிஸார் கைது செய்யப்போவதாக எச்சரித்துள்ளனர். மேலும் முழு ஊரடங்கும் போதும் மக்கள் அச்சப்படாமல் சாலைகளில் சுற்றித் திரிவதை போலிஸார் கட்டுப்படுத்துவதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நோய்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள இன்று ஒரு நாள் ஊரடங்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வீட்டில் முடங்கி இருப்பதால் தமிழகத்தின் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Also Read: இன்று ஒரே நாளில் 69 பேர் பலி... தமிழகம் முழுக்க தீவிரமடையும் கொரோனா தொற்று! #CoronaUpdates