Tamilnadu

“ஜூலை 13 முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு” - மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடுவது ஏன்?

கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பற்ற ஏழை எளிய குழந்தைகள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் தெரிவித்து வந்தனர்.

மேலும், ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழி வகுப்புகள் திட்டம் துவங்கப்பட உள்ளது. வரும் 13ம் தேதி அதனை முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். பாடப்புத்தகங்கள் வழங்கிய உடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களே ஸ்மார்ட் போன், அதிவேக இணைய வசதி இன்றி, பள்ளிகளால் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், எவ்வித மாற்று ஏற்பாடும் இன்றி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை அவசர அவசரமாகத் துவக்குவது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது.

ஸ்மார்ட் போன், லேப்டாப் இல்லாத ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி கற்க அரசு முன்னேற்பாடுகளைச் செய்யாமல் அறிவிக்கக்கூடாது என்றும், மாணவர்களிடையே இதன் மூலம் தாழ்வு எண்ணத்தையும், ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்குவது தவறானது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அவசர அவசரமாக அறிவிப்புகளை வெளியிடுவதும், மக்களின் கடுமையான எதிர்ப்பால் பின்வாங்குவதும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு வாடிக்கையாக இருக்கலாம். மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய விவகாரத்தில் இவ்வாறான அறிவிப்புகள் தவறான விளைவை ஏற்படுத்தும் என்பதே அனைவரின் கருத்தும்.

Also Read: “ஆன்லைன் கல்வி மூலம் மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதா?” -அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!