Tamilnadu
NLCல் ஏற்படும் விபத்தால் தொடரும் பலி : “அனல்மின் நிலைய செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்துக”- வைகோ அறிவுரை!
என்.எல்.சியில் ஏற்பட்ட கொதிகலம் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில், ஐந்தாவது யூனிட்டில் உள்ள கொதிகலன் வெடித்ததில், 6 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் 17 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
கடந்த மே மாதம் 7 ஆம் தேதி அன்று இதே இரண்டாவது அனல்மின் நிலயத்தில் 6ஆவது யூனிட்டில் உள்ள கொதிகலன் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இதே போல கொதிகலன் வெடித்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.என்.சி இந்தியா நிறுவனம் நவரத்னா சிறப்பைப் பெற்று, இயங்கி வருகிறது. அனல்மின் நிலையங்களில் ஏற்படும் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க உடனடியாக தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைத்து ஆய்வு நடத்த மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும்.
அனல்மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் முறையாக நடக்கவும், உரிய கண்காணிப்பு தேவை என்பதையும் இதுபோன்று தொடர்ந்து நடக்கின்ற விபத்துகள் உணர்த்துகின்றன.
மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு என்.எல்.சி.இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கவனத்திற்கும் கொண்டு செல்ல இருக்கிறேன்.
உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 25 இலட்ச ரூபாய் கருணைத் தொகை வழங்குவதோடு, அவர்கள் குடும்பங்களில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும்.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொழிலாளர் நலனுக்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என வைகோ குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!