Tamilnadu

“ஆசனவாயில் லத்தியை நுழைத்து சித்திரவதை செய்த போலிஸார்?” - பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் கடையைத் திறந்ததாக குற்றம்சாட்டி விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் இருவரும் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் ஆகிய இருவரும் சிறையில் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக, ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடலை 3 மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோவில் பதிவு செய்யவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜின் மனைவியும், பென்னிக்ஸின் தாயாருமான செல்வராணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு வருமாறு :

“நாங்கள் சாத்தான்குளம் சந்தை பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறோம். கடந்த 19-ம் தேதி இரவு கடையை விரைவாக அடைக்குமாறு கூறிய சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் என் கணவர் ஜெயராஜை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தகவல் தெரிந்து என் மகன் பென்னிஸ் காவல் நிலையம் சென்றார். அவரையும் போலிஸார் கைது செய்தனர். பின்னர் போலிஸார் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கொரோனா தொற்று காரணமாக நீதிபதியை நேரில் பார்க்க முடியாததால் போலிஸார் தாக்கியதை நீதிபதியிடம் தெரிவிக்க முடியவில்லை.

போலிஸாரால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இருவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் என் மகன் 22-ம் தேதி இரவு 9.30 மணியளவிலும், நேற்று காலை 4.30 மணியளவில் என் கணவரும் உயிரிழந்தனர். தற்போது இருவரின் உடலும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் உள்ளது.

இருவரின் உடலையும் மூன்று மருத்துவர்களுக்கு குறையாத மருத்துவக்குழு அமைத்து பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும், வீடியோ பதிவு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. தந்தை, மகன் உடலையும் 3 மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவேண்டும் என பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி.

இதற்கிடையே, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலிஸார் கொடூரமான முறையில் சித்திரவதை செய்ததாக அதிர்சித் தகவலை அவர்களது உறவினர் ஒருவர் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

“ஜெயராஜும், பென்னிக்ஸும் தரையில் உருண்டதால், காயம் ஏற்பட்டதாக போலிஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். யாராவது காயம் ஏற்படும்படி தரையில் உருள்வார்களா?

போலிஸ் காவலில் இருக்கும்போது பென்னிக்ஸின் ஆசன வாயில் போலிஸார் லத்தியால் குத்தியதால் ஏற்பட்ட ரத்தப் போக்கினாலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது” என ஜெயராஜின் உறவினர் சார்லஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Also Read: பால் திரிந்துபோனால் மாற்றிக்கொடுக்கும் முதல்வரே... அநியாயமாக இரண்டு அப்பாவிகள் பலியானதற்கு பதில் என்ன?