Tamilnadu

பல்டி பழனிசாமிக்கு ஆதரவாக பல்டி அடித்த நியூஸ்7 தொலைக்காட்சி: ஆதாரத்தோடு கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் இரண்டாயிரத்து 532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. வழக்கம் போல் சென்னையிலேயே இன்றும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், ஆயிரத்து 493 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து 41 ஆயிரத்து 172 ஆக மொத்த பாதிப்பு உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு மாநில அரசின் போதிய தடுப்பு நடவடிக்கைகளே இல்லாததுதான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, “கொரோனா விவரங்களை மறைத்தும் - எண்ணிக்கைகளைக் குறைத்தும் காட்டுவதால் நற்பெயர் வாங்க முடியாது; மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளை பரிசீலித்து கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள்” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் தனது அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக அரசு ஆலோசனை வழங்கவேண்டிய இடத்தில் இருந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இத்தகைய கருத்துகளை பேசிவருகிறார். ஆனால் ஆளும் அ.தி.மு.க அரசு மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர் என யார் கோரிக்கையும் காதில் வாங்க்கொள்ளாமல் மெத்தமனாக செயல்படுகிறது. இதனால் கொரோனா பாதிப்பை தடுக்க முடியாமல் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் நியூஸ்7 தொலைக்காட்சி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய கருத்தை ட்விட்டரில் வெளியிட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. அதில், வாக்களித்த மக்கள் தி.மு.க தலைவர் கூறியது சரியான கருத்து என்றே 47 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

ஆனால் அந்த தகவலை ‘கேள்வி நேரம்’ நிகழ்ச்சியின் வெளியிடும்போது எடப்பாடிக்கு ஆதரவாக ’தவறான யோசனை’ என்பதில் மக்கள் வாக்களித்தாக பொய்யாக திரித்து வெளியிட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பழனிசாமிக்கு ஆதரவாக பல்டி அடித்த நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்ட போலி தகவலை ஆதாரத்தோடு கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு தலைவரின் கருத்தைக் கூறி, ‘இது சரியா தவறா எனச் சொல்லுங்கள்’ என்று டிவிட்டரில் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவை தன் ‘கேள்வி நேரம்’ நிகழ்ச்சியில் வெளியிடுகிறது @news7tamil. இன்றைய வாக்கெடுப்பின் ஒரிஜினல் முடிவை அப்படியே உல்டாவாக்கி வெளியிட்டிருப்பதாக இந்த படங்கள் குறிப்பிடுகின்றன இதன் உண்மைத் தன்மை குறித்து சம்பந்தப்பட்ட சேனல்தான் தெளிவுபடுத்தவேண்டும்.

இது உண்மையென்றால், ‘டிவிட்டர் வாக்கெடுப்பைக்கூடக் கைப்பற்றிவிட்டதால் பல்டி பழனிச்சாமிக்கு ஆதரவாக நாங்களும் பல்டியடித்துவிட்டோம்’ என்று ஒப்புக்கொள்ளுமாறு @news7tamil தொலைக்காட்சியைக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பலரும் நியூஸ்7 தொலைக்காட்சியின் வாக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: “கொரோனாவும் சாதாரண சளி, காய்ச்சலும் ஒன்றா?” பின் இறப்பு, பாதிப்புகளை மறைப்பது ஏன்?- மு.க.ஸ்டாலின் கேள்வி!