Tamilnadu
வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் எல்.பலராமன் மறைவு - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது தி.மு.க தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினருமான திரு. எல்.பலராமன் அவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால், இன்று காலை மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் நான் மீளாத் துயரத்திற்கும், சோகத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் சென்னை மாநகரின் முன்னணிக் கள வீரர்களில் ஒருவராகவும், துறைமுகம் பகுதிச் செயலாளராகவும் அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறந்திட முடியாது. அவர் கழகத்தின் ஒரு கடின உழைப்பாளி. கட்சிப் பணியோ, தேர்தல் பணியோ, மக்கள் பணியோ - அனைத்திலும் விறுவிறுப்புடன் களத்திற்கு வரும் அவர், போராட்டம் என்றால் போராளியாகவே மாறி களத்தில் நிற்கும் தைரியசாலி.
கழகத் தலைவராக இருந்து நம்மையெல்லாம் வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அவர்களும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு பம்பரம் போல் சுழன்று பணியாற்றி - ஒரு இயக்கத்தின் தலைவரும், பொதுச்செயலாளரும் தேர்தலில் வெற்றி பெறப் பணியாற்றும் பெருமையைப் பெற்ற கழக முன்னணி நிர்வாகியாக விளங்கியவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் மீது மட்டுமின்றி, என் மீதும் பாசத்தை அருவி போல் கொட்டிய அவரை - ஏன், ஒட்டுமொத்தமாக எங்கள் குடும்பத்தோடும்- கழகக் குடும்பங்களில் உள்ள அனைவரோடும் அன்பாகவும், பாசமாகவும் பழகக் கூடியவரை இன்றைக்கு கழகம் இழந்து நிற்கிறது.
அவர் மறைந்தாலும்- அவரது பணிகளும், தியாகங்களும் மறையாது. எல்.பலராமன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!