Tamilnadu

“நாங்கள் என்ன தீவிரவாதிகளா?” - எடப்பாடி பழனிசாமி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட செய்தியாளர்கள் குமுறல்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து இன்று மாலை சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் பகுதியில் அவர் வந்த காரில் இருந்து இறங்கி மாற்று காரில் ஏறிச் சென்றதாகத் தெரிகிறது.

அப்போது படம் பிடிப்பதற்காக செய்தியாளர்கள் விரைந்து சென்றனர். இதையடுத்து போலிஸார் படம் எடுக்க விடாமல் செய்திப் புகைப்படக்காரர்களை அங்கிருந்த பகுதியிலுள்ள வீட்டில் தனி அறைக்கு அழைத்துச்சென்று பூட்டி வைத்தனர். சுமார் 20 நிமிடங்கள் வரை பூட்டி வைத்தால் நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காவல்துறையின் இந்த மோசமான செயலை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டித்துள்ளது.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ) விடுத்துள்ள அறிக்கையில், “சென்னையில் இருந்து மாலையில் கார் மூலம் முதல்வர் சேலம் சென்றுகொண்டிருந்தார். திண்டிவனம் அருகே வந்த போது முதல்வர் கார் பழுதாகும் நிலை ஏற்பட்டதால் வேறு கார் வரவழைக்கப்பட்டது. சேலத்தில் இருந்து கார் வரும் வரை உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே காத்திருந்தார் முதல்வர். மாற்று காரில் முதல்வர் ஏறிச்செல்வதை படம் எடுப்பதற்காக செய்தியாளர்கள் காத்திருந்தனர்.

முதல்வர் மாற்று காரில் செல்வதை செய்தியாளர்கள் படம் எடுக்க விடாமல் டி.எஸ்.பி விஜிகுமார், இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலிஸார் தடுத்தனர். செய்தியாளர்கள் 3 பேரையும் அருகில் உள்ள வீட்டில் ஒரு மணி நேரம் பூட்டி சிறைவைத்ததால் அதிர்ச்சி அடைந்தனர். முதல்வர் சேலத்தில் இருந்து வந்த மாற்று காரில் ஏறிச் சென்ற பிறகே செய்தியாளர்களை விடுவித்தனர்.

செய்தியாளர்கள் தங்களது நிறுவனத்திற்கு அவர்கள் சொல்லும் பணியை செய்வதற்காக சம்பவ இடத்திற்கு சென்றனர். போலிஸார் அவர்களை படம் எடுக்கவேண்டாம் என்றால் எடுக்காமல் இருந்திருப்பார்கள். அதைவிடுத்து மூன்று பேரையும் நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஒரு கட்டடத்தில் முதல்வர் செல்லும் வரை அடைத்து வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

எப்போதும் முதல்வர் கார் மூலம் சென்னையில் இருந்து சேலம் சென்றால் செய்தியாளர்கள் படம் எடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறை செய்தியாளர்களை படம் எடுக்கவிடாமல் தடுத்து அறையில் வைத்து பூட்டி சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இந்த சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல, காவல்துறையின் இந்த கொடூரமான செயலை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “குடியரசுத் தலைவர் யாரென்றே தெரியாதவர் ஆசிரியர் தேர்வில் ‘டாப்பர்’ ” : உ.பி-யில் நடந்த மாபெரும் முறைகேடு!