Tamilnadu

திருடிய பைக்கை கொரியரில் அனுப்பி வைத்த தொழிலாளி... ஊரடங்கு நேரத்தில் கோவையில் விநோத சம்பவம்! #Lockdown

கொரோனா காரணமாக முதன்முதலில் இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை திண்டாட்டமாகி வருகிறது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை மார்க்கமாக நடந்தும், சைக்கிள், பைக், லாரி என கிடைத்த வாகனத்திலும் பயணித்து அல்லாடி வருகின்றனர்.

50 நாட்களுக்குப் பிறகு ரயில், பேருந்து வசதிகளை ஏற்படுத்தியிருந்தாலும் அவை அனைத்து தொழிலாளர்களுக்கும் கிட்டும்படி அமையவில்லை. இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் இருசக்கர வாகனம் கடந்த மே 18 அன்று காணாமல் போனதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் ஊரடங்கு முடிந்த பின்னரே இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கமுடியும் என போலிஸார் கையை விரித்திருக்கிறார்கள். ஆகவே தானாகவே பைக்கை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி இருக்கிறார் சுரேஷ். அதன்படி, பைக் காணாமல் போன அன்று அருகே இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்ததில் பிரசாந்த் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் காட்சி சிக்கியிருக்கிறது.

இதனிடையே, பைக்கை எடுத்துச் சென்ற பிரசாந்த் ஊரடங்கால் கோவையில் சிக்கியிருந்தவர். அவர் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு செல்ல முற்பட்டுள்ளார். எந்தப் போக்குவரத்தும் கிட்டாததால் சுரேஷின் பைக்கை எடுத்துச் சென்று தனது மனைவி மற்றும் குழந்தையுடன் 200 கி.மீ தொலைவுக்கு பயணித்துள்ளார்.

ஊருக்குச் சென்றதும் பார்சல் சேவை மூலம் பைக்கை கொரியர் செய்திருக்கிறார் பிரசாந்த். இதை அறிந்திராது இருந்த சுரேஷுக்கு நேற்று முன்தினம் கொரியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரவும் அங்கு சென்று ரூ.1,400 கட்டணம் கட்டி பைக்கை கொண்டு வந்திருக்கிறார்.

Also Read: “தந்தையை பின்னால் வைத்து 1,200 கி.மீ சைக்கிள் ஓட்டிய சிறுமி” - ஊரடங்கு வாழ்வில் நெகிழ்ச்சி சம்பவம்!

பைக்கை கண்டதும் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்திருக்கிறார் சுரேஷ். பைக் கிடைத்ததை அடுத்து, காவல் நிலையத்தில் தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார் சுரேஷ்.

இதேபோல, ராஜஸ்தானில் பணியாற்றி வந்த உத்தர பிரதேசத்தைச் புலம்பெயர்ந்த தொழிலாளர் முகமது இக்பால் தன்னுடைய சொந்த ஊரான பரேலிக்கு செல்வதற்காக சிங் ஒருவரின் சைக்கிளை எடுத்துச் சென்றதோடு, மன்னிப்புக் கடிதமும் எழுதிவைத்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஊரடங்கு எதிரொலி: “சொந்த ஊருக்குச் செல்ல சைக்கிளை திருடிய உ.பி தொழிலாளி” - நெகிழவைக்கும் மன்னிப்பு கடிதம்!