Tamilnadu

வறுமையால் சமோசா விற்ற தஞ்சை சிறுவன் - கல்விச் செலவை ஏற்பதாக தொலைபேசி மூலம் மு.க.ஸ்டாலின் உறுதி!

தஞ்சையில் குடும்ப வறுமை காரணமாக சமோசா விற்பனை செய்யும் சிறுவனின் கல்விச் செலவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.

தஞ்சை மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவர் கட்டிட வேலை பார்த்து வந்த நிலையில் நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லமுடியாமல் முடங்கிய நிலையில் அவரின் மனைவி சுமதி வடை, சமோசா உள்ளிட்ட பலகாரங்கள் செய்து வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றிவந்த நிலையில் ஊரடங்கால் அதுவும் முடங்கியது.

இந்நிலையில் பெற்றோர் படும் துன்பத்தை அறிந்து அவர்களின் 12வயது மகன் விஷ்ணு நாள் ஒன்றுக்கு 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிச் சென்று வடை, சமோசா உள்ளிட்ட பலகாரங்களை விற்பனை செய்து கிடைக்கும் வருவாயை வைத்து குடும்பத்தைக் காக்கும் நிலை ஏற்பட்டது.

இச்செய்தியினை அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சிறுவனின் குடும்பத்தினருக்கு உதவிட வேண்டும் என்று கூறியதை அடுத்து தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் சிறுவன் விஷ்ணுவின் இல்லத்திற்கு நேரில் சென்று அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி உதவித்தொகையினையும் வழங்கினர்.

இதையடுத்து, சிறுவன் மற்றும் அவரது தாயாரிடம் தொலைபேசி மூலம் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சிறுவனின் கல்வி செலவையும் ஏற்பதாகத் தெரிவித்தார். இதனால் சிறுவனின் குடும்பத்தினர் அகமகிழ்ந்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய சிறுவன் விஷ்ணுவின் தாய் சுமதி, “தி.மு.க தலைவர் அவர்கள் எங்களிடம் பேசியதும், உதவிகளைச் செய்ததும் வாழ்நாளில் மறக்கமுடியாது என்றார். தி.மு.க-வின் இத்தகைய பணிகளுக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Also Read: “வீண் விளம்பரத்தைக் கைவிட்டு, மக்கள் பணி செய்து கொரோனா பரவலை தடுத்திடுங்கள்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!