Tamilnadu

குடிக்கு காட்டும் அக்கறையை குடிமக்களுக்குக் காட்டாத நீதிமன்றம் - இதைவிட நீதியை அவமதிக்க முடியுமா ?

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் அப்பாவு, அ.தி.மு.க சார்பில் இன்பதுரை உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

அப்போது தபால் ஓட்டுகள் மற்றும் கடைசி இரண்டு சுற்று ஓட்டுகள் எண்ணப்படாமல் இருக்கும் போதே பிரதமர் மோடி முன்னாள் முதல்வர் ஜெயாலலிதாவுக்கு அவசர அவசரமாக வாழ்த்து தெரிவித்தார். பிரதமரின் வாழ்த்தால் தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க வெற்றி பெற்றதாக அவசர அவசரமாக அறிவித்தது.

இதில், ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் அப்பாவுவை விட அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பின்னர் தேர்தலில் நடந்த குளறுபடி முறைகேடுகளை விட்டுவிடாமால், அ.தி.மு.க வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், அப்பாவு தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ராதாபுரம் தொகுதியில் பதிவான 203 தபால் வாக்குகளை எண்ணவில்லை என்பதால், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணவேண்டும் எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கடைசி மூன்று சுற்று வாக்குகளை எண்ணவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதன்படி, தபால் வாக்குகள் மற்றும் மிண்ணனு வாக்கு எந்திரங்கள் அக்டோபர் 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன. அப்போது உயர்நீதிமன்ற வளாகத்தில் சுமார் 11.30 மணியளவில் நீதிபதிகள் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குகள் எண்ணப்பட்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் முடிவுகள் சமர்பிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

ஆனால் அதற்குள் அ.தி.மு.க வேட்பாளர் (எம்.எல்.ஏ) அவசர அவசரமாக உச்சநீதிமன்றம் சென்று வாக்கை எண்ணக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கோரினார். அந்த வழக்கில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவைவெளியிட இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு முன்னரே வாக்கு எண்ணிக்கை முடிந்து இருதரப்பு வேட்பாளர்களிடமும், ண்ணிக்கையில் ஈடுபட்ட உயர்நீதிமன்ற அதிகாரிகளிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது. ஆக முடிவு என்னவென்று அப்பாவு, இன்பதுரை மற்றும் உயர்நீதிமன்றத்துக்கு தெரியும்.

இந்த சம்பவங்கள் நடந்து சுமார் ஒரு வருடம் ஆகிறது. ஆனால் இந்த நிமிடம் வரை நீதி கிடைக்கவில்லை. தி.மு.க சார்பில் போட்டியிட்ட அப்பாவுக்கு இன்னும் ஒரு ஆண்டுதான் மீதம் இருக்கு. ஆனால் தோல்வி அடைந்த அ.தி.மு.க இன்பதுரை 4 ஆண்டாக எம்.எல்.ஏ!

ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் மதுக்கடை திறக்க உடனே உச்சநீதிமன்றம் அவசர வழக்காய் எடுத்துக்கொண்டு ‘நீதி’யை உடனே வழங்கி இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதி என்றுதான் சொல்லவேண்டும். அநீதி - அவலம் என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பாயும். என்ன செய்வது இதுதான் இந்தியா! என்று பொறுத்துக்கொள்வதா ? அல்லது தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று நீதி அரசர்களுக்கு புரிய வைப்பதா? என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: கடலூரை கலக்கிய 'டாஸ்மாக்' போலி டோக்கன் : ரூ.200க்கு கள்ளச்சந்தையில் விற்றது அம்பலம் - 10 பேர் கைது!