Tamilnadu

கொரோனா தொற்றின் மையம் ஆனதா கோயம்பேடு ? : கடலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு பரவிய தொற்று!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நாளுக்கு நாள் வெகுவேகமாக அதிகரித்து வரும் தொற்றால் சென்னையில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 203 பேரில் சென்னையில் மட்டும் 176 பேருக்கு உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து பெரம்பலூர் திரும்பிய 19 பேருக்கும், கடலூர் திரும்பிய 7 பேருக்கும், அரியலூர் சென்ற ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் வேலைபார்த்த வியாபாரிகள், தொழிலாளர்கள், அங்கு பணியாற்றிய காவல்துறையினர் என சுமார் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயம்பேட்டில் கடும் கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய பல தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊரக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அப்படி, கோயம்பேடு மார்கெட்டில் இருந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்குத் திரும்பிய 20 தொழிலாளர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 20 பேரையும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேப்போல் கடலூர் திரும்பிய 7 பேருக்குத் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் விவரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கொரோனா தாக்கம் காரணமாக திருவாரூர், கடலூர், அரியலூரில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவமனை, மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநிலமும் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு கோயம்பேட்டில் பணியாற்றிய தொழிலாளர்கள் சென்றிருப்பதால் மிகப் பெரிய அளவில் சமூக தொற்று பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுறது.

Also Read: “பொது வெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்” : வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த வட கொரிய ஊடகம்!