Tamilnadu

“கொரோனாவை காரணம் காட்டி சம்பளத்தில் கை வைப்பதா?” - அரசுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு! #Lockdown

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கால் பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்கள் முறையான வருமானமில்லாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் சில நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கம் செய்வதாகவும், ஊதியத்தைப் பிடித்தம் செய்வதாகவும் கூறப்படுகின்றன. இந்நிலையில் தனியார் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும், அவர்களின் ஊதியத்தை நிறுத்தம் செய்யக்கூடாது என்றும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அருண் சரவணன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பிலும், ஊரடங்கு நீட்டிப்பின்போது பிரதமர் வெளியிட்ட அறிவிப்பிலும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யக்கூடாது என்றும், ஊதியத்தை நிறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் நிறுவனங்களின் இதுபோன்ற செயல்கள் ஊழியர்களுக்கு மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் தருவதாகவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வதற்கான உரிமையும், பணிபுரிவதற்கான உரிமையையும் பறிக்கும் வகையில் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் மத்திய அரசை சேர்த்ததுடன், வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் மே 21ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

Also Read: ஊரடங்கை நீட்டிக்காவிடில் மே மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சமடையும்... இந்தியாவுக்கு TIMES ஆய்வு எச்சரிக்கை!