Tamilnadu
“தாயின் இறுதிச்சடங்கு முடிந்த அடுத்தகணமே பணிக்குவந்த தூய்மைப் பணியாளர்”: பெரம்பலூரில் நெகிழ்ச்சி சம்பவம்!
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தங்கள் பணியைத் தொய்வில்லாமல் செய்து வருகின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.
மருத்துவர்களுக்கு அடுத்து நோய்க் கிருமிகளுடன் நேரடியாகப் போராடுவது இந்தத் தூய்மைப் பணியாளர்கள்தாம். தரமான முகக்கவசம், கையுறைகள் போன்றவை இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அதனால் மிகுந்த வேதனைகளை சந்தித்தாலும் அந்த வேதனைகளை மறந்து பணியை தீவிரமாகச் செய்துவருகின்றனர்.
சில இடங்களில் தூய்மைப் பணியாளர்களின் சிறப்பான பணிகள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. அப்படி இருக்கையில், பெரம்பூரைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் அய்யாதுரை தனது தாயின் இறுதிச் சடங்கு முடிந்த அடுத்தகணமே பணிக்கு வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து அங்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த வாரத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் பகுதியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு சுகாதாரத்துறை சார்பில் தூய்மைப் பணிகளும், தடுப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த தூய்மைப் பணியில் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை என்பவர் பணியாற்றி வந்துள்ளார். தினமும் இரண்டு மூன்று வேளை தெருக்களில் மருந்து தெளிக்கும் பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு அய்யாதுரை செய்துவந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் அவரது தாயார் அங்கம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து சொந்தக்காரர்களுக்கு தகவல் கொடுத்த அய்யாத்துரை இந்தச் சூழலில் இறுதி சடங்கிற்கு யாரும் வரவேண்டாம்; நானே பார்த்துக்கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் சில மணிநேரத்திலேயே தாயாரின் உடலை அக்கம்பக்கத்தினரோடு சென்று இடுகாட்டில் அடக்கம் செய்துவிட்டு, பின்னர் உடனே வீட்டுக்கு சென்று ஆயத்தமாகி தனது தூய்மைப் பணிக்கு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து அய்யாதுரை கூறுகையில், “அம்மா இறந்தது வருத்தம்தான். 20 வருடங்களாக இந்த ஊரை தூய்மைப்படுத்தி வருகின்றேன். இந்த மோசமான சூழலில் ஊர் இன்னும் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது.
இறந்தவர்கள் மீண்டும் வரப்போவதில்லை, இப்படிச் செய்ததற்கு அம்மாவும் கோபித்துக்கொள்ளப்போவது இல்லை. அதனால் வீட்டில் முடங்கிக் கிடத்தால் ஊரை யார் கவனிப்பது என எண்ணி உடனே பணிக்குத் திரும்பிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த சிந்தனை பெரிய படிப்பு படித்தவர்களுக்குக் கூட தோன்றாது. அந்த அளவு தனது பணியும் மக்களை காக்கவேண்டும் என்ற எண்ணமும் அவரிடம் உள்ளது. அவரது இந்தச் செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !